வாஷிங்டன்: அமெரிக்காவின் சில பல்கலைக்கழகங்களில் நடப்பில் இருக்கும் இன அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறைகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்ட், வடகெரொலைனா பல்கலைக்கழகங்களில் இத்தகைய முறைகள் தற்போது நடப்பில் உள்ளன.
கறுப்பினத்தவர்கள் போன்ற சிறுபான்மையினரைக் கூடுதல் எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள இவை உதவியிருக்கின்றன; உச்சநீதிமன்றத்தின் முடிவு அதற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ‘ஸ்டூடென்ட்ஸ் ஃபார் ஃபேர் அட்மிஷன்ஸ்’ என்றழைக்கப்படும் குழுவிற்குச் சாதகமாக அமைந்தது.
இந்த விவகாரத்தின் தொடர்பில், அக்குழுவின் கோரிக்கைகளைக் கீழ்நீதிமன்றங்கள் முன்னதாக நிராகரித்தன. அதைத் தொடர்ந்து அது மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இதையடுத்து பாடத் திட்டங்களில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் சவால்களை கருத்தில்கொண்டு செயல்படுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்கலைக்கழகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இன அடிப்படையில் பாரபட்சத்துடன் நடத்தப்படுவது மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் திரு பைடன் கண்டித்துப் பேசினார்.
“ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு (அஃபர்மெட்டிவ் ஆக்ஷன்) நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீதிமன்றத்தின் முடிவில் எனக்கு அறவே உடன்பாடு கிடையாது,” என்று திரு பைடன் கூறினார்.

