கோத்தா பாரு: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் கால்சட்டை அணிந்திருந்த ஓர் இஸ்லாமியர் அல்லாத பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது; அப்பெண்ணுக்கு விதித்த அபராதத்தை கிளந்தானில் உள்ள ஓர் உள்ளாட்சி அமைப்பு இப்போது மீட்டுக்கொண்டுள்ளது.
மலேசியாவின் உள்ளாட்சி மேம்பாட்டு மத்திய அமைச்சரான கா கோர் மிங் ஜூலை 1ஆம் தேதியன்று இதைத் தெரிவித்தார். இதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்த பிறகு கோத்தா பாரு நகராட்சி அமைப்பு (எம்பிகேபி) அபராதத்தை மீட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
“அப்பெண் அபாராதம் செலுத்தத் தேவையில்லை. அவருக்குத் தவறான தகவல் வழங்கப்பட்டிருக்கலாம். கால்சட்டை விற்கும் தனது சொந்தக் கடையில்தான் அவர் கால்சட்டை அணிந்திருந்தார்,” என்று திரு கா கூறினார்.
“அவர் கால்சட்டை அணிவது தவறென்றால் கடையில் விற்கப்படும் எல்லா கால்சட்டைகளையும் அகற்றவேண்டியிருக்கும். அது அர்த்தமற்றது. எனினும், பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூன் மாதம் 25ஆம் தேதியன்று பெயர் அறியப்படாத அப்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் கிளந்தான் தலைநகர் கோத்தா பாருவில் நிகழ்ந்தது.