அமெரிக்க அதிபர் பைடன் சூளுரை: மாணவர் கடனை ரத்து செய்ய வேறு வழியில் முயல்வோம்

அமெரிக்க அதிபர் பைடன் சூளுரை: மாணவர் கடனை ரத்து செய்ய வேறு வழியில் முயல்வோம்

2 mins read
19a19e45-b2c4-4a9f-bf5a-f64bc0f51cfb
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மாணவர் கடன் நிவாரணத் திட்டம் நியாயமற்றது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று குடியரசுக் கட்சியினர் வாதிடுகிறார்கள். - படம்: ராய்ட்டர்ஸ் 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க மாணவர்களுக்குக் கடன் நிவாரணம் அளிக்கும் புதிய திட்டங்களை ஜூன் 30ஆம் தேதியன்று அறிவித்தார்.

பில்லியன்கணக்கான டாலர் மதிப்புள்ள மாணவர் கடன்களை ரத்து செய்ய வகைசெய்யும் ஒரு திட்டத்தைத் தடுத்துவிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தை அவர் குறைகூறினார்.

உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டாலும் தமது நிர்வாகம், உயர்கல்விச் சட்டம் என்ற வேறு ஏற்பாடு மூலமாக மாணவர் கடன் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர முயலும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒழுங்குமுறை ஏற்பாட்டு நடைமுறை ஒன்றைக் கல்வித்துறை தொடங்கி இருக்கிறது. அது நடப்புக்கு வரப் பல மாதங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்க மாணவர்கள் செலுத்தாமல் வைத்து இருக்கும் 430 பில்லியன் அமெரிக்க டாலர் (S$582 பில்லியன்) கடனை ரத்து செய்ய பைடன் நிர்வாகம் திட்டமிடுகிறது.

ஆனால், அந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் 6க்கு 3 என்ற முடிவில் தடுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை குடியரசுக் கட்சியினர் வரவேற்றனர். நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஜனநாயகக் கட்சி அதிபரான பைடனின் கொள்கை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தப்போவதாக குடியரசுக் கட்சியினர் மிரட்டினர்.

இருந்தாலும் தமது குறிக்கோளை வேறு வழியில் நிறைவேற்றப் போவதாக தம் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது என்று அதிபர் தெரிவித்தார்.

‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு வழியைத்தான் மூடி இருக்கிறது. நாங்கள் வேறு வழியில் செல்லப்போகிறோம்,’’ என்று அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாணவர்களின் கடன் நிவாரண திட்டத்தைத் தடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு தவறானது. அது சரியில்லாத ஒன்று என்று அதிபர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் அதிபராக 2020ல் திரு பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அவருக்கு ஆதரவான கூட்டணியில் இடம்பெற்றிருந்த புரோகிரசிவ் என்ற தரப்பைச் சேர்ந்த வாக்காளர்களும் காரணம்.

மாணவர்களின் கடன் சுமையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாகவே அவர்கள் வெள்ளை மாளிகையை நெருக்கி வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் அளித்து இருக்கும் தீர்ப்பு, இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கைகள் தேவை என்று குரல்கள் ஓங்கி ஒலிக்க வகைசெய்து இருக்கிறது.

‘‘அதிபருக்கு மேலும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் கடன்களை அதிபர் ரத்து செய்ய வேண்டும்,’’ என்று ஜனநாயகக் கட்சி செனெட்டர் எலிசபெத் வாரன் டுவிட்டரில் தெரிவித்தார்.

அமெரிக்கர்களில் ஏறக்குறைய 53 விழுக்காட்டினர் பைடனின் மாணவர் கடன் ரத்து திட்டத்தை ஆதரித்தனர். ஜனநாயகத் தரப்பினரில் 81 விழுக்காட்டினர் அந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது இந்த ஆண்டு நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ்/ஐபிஎஸ்ஓஎஸ் ஆய்வு மூலம் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்
மாணவர்