பிரான்சில் வன்செயல் தீவிரம் குறைகிறது

2 mins read
e21c9c62-e41b-4ea7-9d75-198f068318c9
பிரான்சின் தென் பகுதியில் உள்ள மார்செய்ல் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் களைக்க காவல்துறை அதிகாரிகள் ஆயத்தமானபோது, ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள குனிந்து ஓடுகிறார். - படம்: ஏஎஃப்பி 
multi-img1 of 2

பாரிஸ்: பிரான்சில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது விநியோக வாகன ஓட்டுநரைச் சுட்டுக்கொன்றுவிட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெறும் வன்செயல்கள் சனிக்கிழமையும் நீடித்தன.

என்றாலும் முந்தைய நாள்களுடன் ஒப்பிடுகையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்ததாகத் தெரியவந்தது.

நாடு முழுவதும் உள்ள பல நகர்களிலும் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பணியில் பரித்துவிடப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வேளையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனிக்கு தான் மேற்கொள்ளவிருந்த அதிகாரபூர்வ பயணத்தை ஒத்திவைத்துவிட்டார்.

நாட்டின் நிலவரத்தைக் கையாளுவதற்குத் தோதாக அதிபர் ஜெர்மனி பயணத்தை இப்போதைக்கு ரத்து செய்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரான்சில் 2018 பிற்பகுதியில் ‘மஞ்சள் உடை போராட்டம்’ நடந்தது. அப்போது பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் முடங்கிப்போய்விட்டன. அதற்குப் பிறகு பிரான்ஸ் இப்போதுதான் மிகப் பரவலான வன்செயலை எதிர்நோக்குகிறது.

பல நகர்களிலும் சனிக்கிழமை இரவு ஏறக்குறைய 45,000 காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

பாரிஸ், லயோன், மார்செய்ல் ஆகிய மூன்று ஆகப் பெரிய நகர்களுக்கும் மேலும் காவல்துறையினர் அனுப்பப்பட்டனர்.

மார்செய்ல் நகரில் சனிக்கிழமை இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

பல நகர்களில் அங்குமிங்குமாக பதற்றமும் கைகலப்புகளும் நிலவியது என்றாலும் பொதுவாக சனிக்கிழமை இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் கொஞ்சம் தணிந்து இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,311 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 700க்கும் மேற்பட்ட கடைகள், பேரங்காடிகள், உணவகங்கள், வங்கிக் கிளைகள் சூறையாடப்பட்டதாகவும் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டதாகவும் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் நிதி அமைச்சர் லி மேரி தெரிவித்தார்.

நாடு முழுவதும் செயல்படும் உள்ளூர் நிர்வாகங்கள் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து இருக்கின்றன. மாலை நேரத்தில் செயல்படக்கூடாது என்று பொதுப் போக்குவரத்துக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

பிரான்சில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் ஒரு சூழ்நிலையில் அந்த நாட்டில் இடம்பெறும் வன்செயல் அதிபர் மேக்ரானுக்கு மேலும் நெருக்குதல்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சீனா புகார்

இதனிடையே, பிரான்சின் தென் நகரான மார்செய்ல் நகரில் சீன சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து தாக்கப்பட்டதாகவும் அதிலிருந்தவர்கள் இலேசாக காயம் அடைந்ததாகவும் அந்த நகரத்தில் உள்ள சீனாவின் தூதரக அதிகாரி, பிரான்சிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்.

சீன குடிமக்களையும் அவர்களின் சொத்துகளையும் பிரான்ஸ் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பிரான்சிடம் முறையாக புகார் தாக்கல் செயப்பட்டு இருக்கிறது என்று சீனாவின் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்