போர்ட்-ஏ-பிரின்ஸ்: ஹைட்டியில் குற்றவியல் கும்பல்களை ஒடுக்குவதில் காவல்துறைக்கு உதவ அனைத்துலக முயற்சிக்கு ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஹைட்டி நிலவரம் குறித்து பல மாதகாலமாக திரு குட்டரெஸ் குரல்கொடுத்து வந்துள்ளார். வன்முறை, மோசமடைந்துவரும் பொதுச் சுகாதார நிலவரம், அரசியல் நிலையற்றதன்மையால் ஹைட்டி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ஐநா தலைவர் என்ற முறையில் ஹைட்டிக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ள திரு குட்டரெஸ், அங்கு நிலவரத்தை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
“அனைத்துலக அரசியல் வரைபடத்தில் ஹைட்டியை நாம் வைக்கவேண்டும். ஹைட்டி மக்களின் துயரத்திற்கு அனைத்துலக சமூகம் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று செய்தியாளர் சந்திப்பில் திரு குட்டரெஸ் கூறினார்.
ஹைட்டி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு (5.2 மில்லியன்) மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பேர் சிறுவர்களாவர்.
2016க்குப் பிறகு அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படவில்லை.


