தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூர்வ குடிமக்களுக்கு ஆதரவாகஆஸ்திரேலியாவில் பேரணி

2 mins read
ea6f6ffa-4064-4023-8462-74d28a1a2264
பூர்வ குடிமக்களை அங்கீகரிக்கும் வாக்கெடுப்புக்கு ஆதரவு குறைந்து வருவதால் நேற்று பேரணிகள் நடத்தப்பட்டன. - படம்: தாமஸ்மே023/டுவிட்டர்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நாட்டின் பூர்வ குடிமக்களை அரசியலமைப்பில் அங்கீகரிக்கும் பிரசாரத்துக்கு ஆதரவாக நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இவ்வாண்டு இதன் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கும் வேளையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மக்கள் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. அரசியல் அமைப்பைத் திருத்தவும் பழங்குடியினர் மற்றும் டோரஸ் தீவு மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்கவும் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

பிரதமர் ஆண்டனி அல்பனிசின் தொழிற்கட்சி அரசாங்கம் இந்த மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் எதிர்க்கட்சியான லிபரல்-தேசிய கன்சர்வேட்டிவ் கட்சி ‘இல்லை’ என வாக்களிக்க வலியுறுத்துகிறது.

சிட்னியில் நடந்த சீர்திருத்தத்திற்கு ஆதரவான பேரணியில் பங்கேற்றவர்கள் ‘ஆம் என்று வாக்களிக்கவும்’ என்று எழுதப்பட்ட டி-சட்டைகளை அணிந்திருந்தனர் என்று ஆஸ்திரேலிய சமூக சேவை மன்றத்தின் டுவிட்டர் பதிவு படங்கள் காட்டின. உலுரு அறிக்கை என்று பொறிக்கப்பட்ட தொப்பிகளையும் அவர்கள் அணிந்திருந்தனர். இது, பூர்வீகக் குரலுக்கு அழைப்பு விடுக்கும் முக்கிய ஆவணத்தைக் குறிக்கிறது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட 25க்கும் மேற்பட்ட பேரணிகளுக்கு ‘யெஸ்23’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

சிட்னியில் மட்டும் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர். ஒட்டுமொத்தமாக 25,000 பேர் பேரணிகளில் பங்கேற்றார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இத்தகைய சமூக நிகழ்வுகள், இவ்வாண்டு இறுதியில் நடத்தப்படும் வாக்கெடுப்பு வெற்றி பெறுவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது,” என்று ‘யெஸ்23’ அமைப்பு குறிப்பிட்டது.

மக்கள் ஒன்றுசேர்ந்து மதிப்புமிக்க தகவல்களை பரிமாறவும் இவை வாய்ப்பு அளிக்கின்றன என்று அமைப்பு மேலும் கூறியது.

வாக்கெடுப்புக்கான ஆதரவு குறைந்து வருவதாகத் தோன்றியதைத் தொடர்ந்து பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்