மலாக்கா: பண்டார் ஹிலிரில் உள்ள மலேசியாவின் ஆக உயரமான சுழல்கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 40 சுற்றுப்பயணிகள் அரைமணி நேரம் சிக்கிக்கொண்டனர். அவர்களில் எண்மர் சிறுவர்கள்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நிகழ்ந்ததாக மினாரா தாமிங் சரி தலைமை நிர்வாகி அஸ்லான் அபிடின் தெரிவித்தார்.
தரையிலிருந்து 60 மீட்டர் உயரத்தில் அக்கோபுரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
அப்போது அதில் 36 சுற்றுப் பயணிகள் இருந்தனர்.
“கோபுரத்தில் உடற்குறையுள்ள சுற்றுப்பயணி ஒருவரும் இருந்தார்,” என்றார் திரு அஸ்லான்.
சுற்றுப்பயணிகள் அனைவரும் அரைமணி நேரத்திற்குள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.
கோபுரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் பின்னர் கண்டறியப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, மீட்பு நடவடிக்கையை மேற்பார்வையிட தம் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக மலாக்கா தீயணைப்பு, மீட்புத்துறை தளபதி அப்துல் ரஹிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அக்கோபுரம் 110 மீட்டர் உயரம் கொண்டது. அதில் ஏறி 360 டிகிரி கோணத்தில் சுற்றுப்புறத்தைக் காண முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் வரை கோபுரத்தில் ஏறலாம். அதில் பார்வை நேரம் ஏழு நிமிடங்கள் நீடிக்கும்.