கோலாலம்பூர்: பொதுச் சேவை தொழில்முறை வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவது தொடர்பில் தகுதியுள்ள 4,000 பேருக்கான கட்டணத்தை அரசாங்கமே செலுத்தும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 3,500 உரிமங்கள், பொதுச் சேவை வாகனங்கள் (பிஎஸ்வி) மின்செயலி வழியாகப் பதிவுசெய்யும் வாகனங்கள் அல்லது டாக்சிகளுக்கானவை என்றும் எஞ்சிய ஐந்நூறும் பொதுச் சேவைப் பேருந்து உரிமங்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த ‘மைபிஎஸ்வி’ திட்டமானது, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் நாட்டில் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவளித்து, மேம்படுத்த உதவும் என்றும் திரு லோக் குறிப்பிட்டார்.
2023 வரவுசெலவுத் திட்டத்தில் ‘மைபிஎஸ்வி’ திட்டத்திற்காக இரண்டு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘பிஎஸ்வி’ பேருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ‘பிரசாரனா’ வழங்கும் வேலைவாய்ப்புகளைப் பெற முயல்வர் என்றும் திரு லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

