தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எட்டு சீனக் கப்பல்கள் தைவான் நீரிணையை கடந்து சென்றதாக தைவான் அபாயச்சங்கு

2 mins read
9ebfac11-cfaa-4cba-b715-476a4e179fa6
தைவான் ராணுவ வாகனம் ஒன்று அமெரிக்க தயாரிப்பான ஏவுகணையை ஏவி பயிற்சியில் ஈடுபட்டது. - படம்: ஏஎஃப்பி

தைப்பே: தைவான் நீரிணையின் நடுக்கோட்டு எல்லையை எட்டு சீனக் கப்பல்கள் கடந்து சென்றதாக தைவான் அரசாங்கம் அபாயச் சங்கு ஊதியிருக்கிறது.

தைவான் தனக்குச் சொந்தமான பகுதி என்று வலியுறுத்தி வரும் சீனா, தேவை ஏற்பட்டால் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தைவான் தனது நாட்டுடன் இணைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் அண்மைய ஆண்டுகளாக ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் போர்க் கப்பல்களையும் போர் விமானங்களையும் தைவானுக்கு அருகே அனுப்பி சீனா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.

கடந்த செவ்வாய்க் கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8.00 மணியிலிருந்து மொத்தம் 24 சீன போர் விமானங்கள் தைவான் அருகே தென்பட்டதாகவும் அவற்றுடன் சேர்ந்து நான்கு சீன போர்க்கப்பல்கள் கூட்டு தயார்நிலை சுற்றுக்காவலில் ஈடுபட்டதாகவும் தைவான் தற்காப்பு அமைச்சு கூறியது.

சீனாவை எச்சரிக்கும் வகையில் தைவானும் தனது போர் விமானங்களை அனுப்பியது. சீனாவின் நடவடிக்கைகளை ஏவுகணை தற்காப்பு முறை மூலமும் தைவான் கண்காணித்தது.

“எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலும் வட்டாரப் பாதுகாப்புக்கு நல்லதல்ல,” என்று தைவான் எச்சரித்துள்ளது.

அதிபர் வேட்பாளர் நம்பிக்கை

இதற்கிடையே தைவானின் எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளரான ஹவ் யூ-இ, சீனாவுடன் அமைதி நிலைநாட்டப்படும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தைவான் நீரிணையில் அமைதியும் நிலைத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும் என்று கூறிய அவர்,, கட்டாய ராணுவச் சேவை முன்பு இருந்ததுபோல நான்கு மாதங்களுக்கு குறைக்கப்படும் என்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான குவோமின்டாங் சார்பில் திரு ஹவ் போட்டியிடுகிறார்.

ஆனால் சீனாவுடனான உறவு மோசமடைந்து பதற்றமும் அபாயமும் அதிகரித்துள்ளதால் தைவானின் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி, கட்டாய ராணுவச் சேவையை ஓராண்டுக்கு அதிகரித்தது.

நாட்டை தற்காக்க ராணுவச் சேவையை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி கூறியது.

இந்த நிலையில் திரு ஹவ், தைவான் மக்களுக்கான கட்டாய ராணுவச் சேவையை நான்கு மாதங்களுக்கு குறைக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளரான ஹவ் யூ-இ
எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளரான ஹவ் யூ-இ - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்