நீண்டகாலத்துக்கு உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்கும் இலக்கை எட்ட முடியாததுபோல் இருப்பதாக பருவநிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்குக் காரணம் பல மாதங்களாக உலகின் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டபோதும் பல நாடுகள் இலக்கை அடைய அதற்குத் தேவையான திட்டங்களை வகுக்காததே என்று இவர்கள் கூறுகின்றனர்.
ஜெர்மனியின் பான் நகரில் பருவநிலை குறித்த மாநாடு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், உலக சராசரி வெப்பநிலை தொழில் துறை புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையில் இருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் ஆதரவில் இயங்கும் கோப்பனிக்கஸ் பருவநிலை மாற்ற சேவை மையம் என்ற அமைப்பு கூறுகிறது.
உலக சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை இதற்குமுன் தற்காலிகமாக தாண்டியுள்ளபோதும் ஜூன் மாதம் ஆரம்பித்த கோடை காலத்தில் வட துருவ நாடுகளில் இப்படி நடந்துள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அத்துடன், கடல் பகுதிகளிலும் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை அதிகரித்ததை அமைப்பு குறிப்பிட்டது.
உலகில் மிக அதிக அளவில் கரிமத்தை வெளியிடும் நாடுகளைச் சேர்ந்த பிரிதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாகும் நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஜூன் மாதம் வெப்பநிலை உச்சத்தை எட்டியது. இதேபோல், அமெரிக்காவிலும் கடுமையான அனல் காற்று வீசியது.
இதற்கிடையே, 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியீடு இல்லா நிலையை எட்ட உலக நாடுகள் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அறைகூவல் விடுத்துள்ளார். இதை இந்த வாரம் லண்டனில் நடைபெறும் கப்பல் துறை பேச்சுவார்த்தையின்போது காண வேண்டும் என்றும் கரிமமில்லாத நிலையை எட்ட விரைந்து செயல்படும்படி அவர் உலக நாடுகளை கேட்டுக்கொண்டார்.
எனினும், இந்த இலக்குக்கு சீனா உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.
உலக வர்த்தகத்தில் 90 விழுக்காடு கப்பல் துறையை நம்பியிருக்கும் நிலையிலும் உலகின் மொத்த கரிம வெளியீட்டில் 3 விழுக்காடு பங்கு வகிப்பதாலும், இதில் திட்டவட்டமான நடவடிக்கை தேவை என சுற்றுசசூழல் ஆர்வலர்களும் முதலீட்டாளர்களும் எடுத்துரைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் எதிர்கால உலகம் பசியாலும் துன்பத்தாலும் உண்மையிலேயே பயங்கரமான காலத்தை நோக்கிச் செல்வதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.
இதில் உலகத் தலைவர்கள் குறுகிய கால கண்ணோட்டத்துடன் செயல்படும் போக்கை அவர் கண்டித்தார். கடுமையான பருவநிலை மாற்ற நிகழ்வுகள் உலகில் பயிர்கள், கால்நடைகள், சுற்றுச்சூழல்களை அழித்து சமூகங்கள் தங்களை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாமலும் ஆதரவில்லாமலும் தவிப்பதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.
மற்றொரு நிலவரத்தில் கடுமையான பருவநிலையால் சீனாவில் இம்மாதம் பல இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் என்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிவரும் என்றும் கூறியுள்ளது.