‘அரசியல் அமைப்புக்குஏற்ப நாட்டைநிர்வகிக்கிறேன்’

1 mins read
294ebbd4-d458-4b89-9b48-47432db8088b
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீருக்கு பதிலடி தந்த அன்வார் இப்ராகிம். - படம்: ஸ்டார்

புத்ராஜெயா: கூட்டரசு அரசியலமைப்பு கொள்கையின்படி நாட்டை நிர்வகிக்கிறேன் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

மலேசியாவை மதச்சார்பற்ற, பல சமய நாடாக மாற்றுவதற்கு அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஐக்கிய அரசாங்கம் முயற்சி செய்வதாக அண்மையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் அன்வார் பேசினார்.

கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயத்தின் நிலைப்பாட்டின்படி நாட்டை ஆட்சி செய்து வருவதாக அன்வார் கூறினார்.

“மலாய் மொழி நாட்டின் தேசிய மொழியாகும். அதே சமயத்தில் ஆங்கிலமும் முக்கியமான மொழி,” என்றார் அவர்.

முன்பு அதிகாரத்தில் இருந்தவர்கள் மலாய் மொழியின் மதிப்பை கட்டிக்காக்கத் தவறிவிட்டனர் என்று அவர் கூறினார்.

புத்ராஜெயாவில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு அவர் பேசினார்.

அன்வார் இப்ராகிம் மீது நாற்பது டிஏபி எம்.பி.க்கள் ஆதிக்கம் செலுத்துவதாக டாக்டர் மகாதீர் சொன்னார்.

இதற்குப் பதிலளித்த அன்வார், டிஏபி எந்தவொரு தருணத்திலும் இஸ்லாமிய நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியதில்லை.

“அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மை நானல்ல. நான் ஒரு முஸ்லிமாக இஸ்லாமிய கோட்பாடுகளை நிலைநாட்டும் பொறுப்பு எனக்கு உள்ளது. முஸ்லிம்கள் அல்லாதோர் உட்பட மலேசியர்களின் உரிமைகளும் நீதியும் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும்,” என்று அன்வார் மேலும் கூறினார்.

இரண்டு முறை முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகம்மது, கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக பல இன நாடாக மலேசியாவை அரசாங்கம் மேம்படுத்துகிறது என்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறை கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்