கிராண்டன்: அமெரிக்காவில் ரோலர் கோஸ்டர் கேளிக்கை வாகனத்தில் கோளாறு ஏற்பட்டதால் எட்டுப் பேர் குறைந்தது மூன்று மணிநேரத்துக்குத் தலைகீழாகத் தொங்க நேரிட்டது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தாலும் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள கிராண்டன் நகரில் நிகழ்ந்தது. ‘ஃபாரஸ்ட் கெளன்டி ஃபெஸ்டிவல்’ எனப்படும் கேளிக்கை விழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று ரோலர் கோஸ்டரில் கோளாறு ஏற்பட்டதால் இந்நிலை உருவானதென சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கிராண்டனிலிருந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்டிகோ நகரைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள் முதலில் சம்பவ இடத்திற்கு சென்றடைந்தனர். ரோலர் கோஸ்டரில் கோளாறு ஏற்பட்டு ஏறக்குறைய 40 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.
ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தோரை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
ரோலர் கோஸ்டரில் சிக்கியவர்களில் ஒரு சிறுவயதுப் பெண்ணும் ஒரு முதியவரும் அடங்குவர். அப்போது முதலில் முதியவரை மீட்குமாறு அப்பெண் தீயணைப்பு அதிகாரியிடம் கூறியதை ஃபேஸ்புக் பயனீட்டாளர் ‘ஸ்காட் பிராஸ்’ பாராட்டினார். சம்பவம் பதிவான காணொளிகளை அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.