லண்டன்: வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம், மோசடிக்காரர்களுக்குச் செல்கிறதா என வங்கிகள் அறிய உதவுமாறு மாஸ்டர்கார்ட் நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை விற்பனைக்கு விடுகிறது.
‘பயனீட்டாளர் மோசடி அபாயம்’ என்றழைக்கப்படும் அதனைப் பயன்படுத்த ‘லோய்ட்ஸ் பேங்கிங் குரூப்’, ‘நெட்வெஸ்ட் குரூப்’ போன்ற பிரிட்டனின் ஒன்பது பெரிய வங்கிகள் விண்ணப்பம் செய்துள்ளதாக மாஸ்டர்கார்ட், புளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
பல ஆண்டுகள் கிடைக்கப்பெற்ற பரிவர்த்தனை தரவுகளைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்ட அது, மோசடிகளுடன் தொடர்புடைய கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படுகிறதா என்பதைக் கணிக்க உதவுகிறது.
இத்தகைய மோசடிகளில், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினராகவோ நண்பராகவோ போலியாகச் செயல்படுவோரின் கணக்குகளில் பணம் போடப்படுகின்றது.
2024ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற புதிய விதிமுறைகளுக்கு வங்கிகள் ஆயத்தமாகிவரும் வேளையில் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக மாஸ்டர்கார்டின் இணைய, நுண்ணறிவுப் பிரிவுத் தலைவர் அஜய் பல்லா கூறினார்.

