பிலடெல்பியா: ஜூலை நான்காம் தேதி வாரயிறுதியில் ஐவரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிலடெல்ஃபியா துப்பாக்கிக்காரர் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு முன்னர் சமூக ஊடகத்தில் கவலைதரும் செய்திகளை வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 வயது கிம்பிரேடி கேரிக்கர் என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சந்தேக நபர், புதன்கிழமையன்று பிலடெல்ஃபியா மாவட்ட நகராட்சி நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் தொடர்பில் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்தத் தாக்குதலில் இரண்டு பிள்ளைகளும் காயமுற்றனர்.
அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து புதன்கிழமை காலை வரை, ஏறத்தாழ 16 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. அந்தச் சம்பவங்களில் 15 பேர் மாண்டனர். 94 பேர் காயமுற்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிக்காரர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்திகள் குறித்து மேல்விவரம் வெளியிடப்படவில்லை. செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

