வாஷிங்டன்: உக்ரேனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராட உதவியாக கொத்துவெடி குண்டுகளை உக்ரேனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிடுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அமெரிக்காவின் இந்தத் திட்டத்தை மனித உரிமைக் குழுவினர் எதிர்த்து வருகிறார்கள்.
இருந்தாலும் ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தில் அந்தக் குண்டுகள் உக்ரேனுக்கு மிகப் பெரிய சக்தியைக் கொடுப்பவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிடும் ஆகாய ஆயுதங்கள் பற்றிய அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். அவர்கள் தங்கள் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.
உக்ரேனுக்கு கொத்துவெடி குண்டுகளை அனுப்புவது பற்றி அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஆனால், இதுநாள் வரை அது தொடர்பில் முறையான எந்த அறிவிப்பும் இல்லை.
அமெரிக்க அதிபர் பைடன், அடுத்த வாரம் லித்துவேனியாவின் வில்னியஸ் நகரில் நடக்கும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
அந்த மாநாட்டில் உக்ரேன் பிரச்சினை முக்கிய விவாதிப்பு அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, கொத்துவெடி குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மனித உரிமை அமைப்புகள் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்தகைய குண்டுகளை உக்ரேனுக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் அவை அமெரிக்காவை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளன.
கொத்துவெடி குண்டுகளை ரஷ்யப் படைகளும் உக்ரேன் படைகளும் பயன்படுத்தி இருக்கின்றன.
அதன் காரணமாக உக்ரேனிய குடிமக்கள் பலரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அந்த அமைப்புகள் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டின.
உக்ரேனுக்கு கொத்துவெடி குண்டுகளை அனுப்ப வேண்டுமென்றால் அதிபர் பைடன், உரிமை அல்லது கோரிக்கைத் தள்ளுபடி ஆவணம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும்.
தென் கொரியாவுக்கு 2021ல் கொத்துவெடி குண்டுகளை ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் அதே போன்ற ஆவணம் ஒன்று முன்பு கையெழுத்திடப்பட்டது என்பதை அந்த அதிகாரிகளில் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
உக்ரேனுக்கான அமெரிக்காவின் புதிய ஆயுத உதவித்திட்டத்தின் மதிப்பு US$500 மில்லியன் (S$680 மில்லியன்) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

