ஊழல் கலாசாரத்துக்கு முடிவுகட்ட மலேசியாவில் புதிய நடைமுறைகள் அமல்

ஊழல் கலாசாரத்துக்கு முடிவுகட்ட மலேசியாவில் புதிய நடைமுறைகள் அமல்

2 mins read
dbccb114-5526-4ffc-be1a-8e532100ef95
வெளிநாட்டினர் ஒருவருக்கு அனுமதி அளிக்கும் அல்லது அனுமதி மறுக்கும் அதிகாரம் இனிமேல் மூத்த குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்கு மட்டுமே இருக்கும். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டினரை நாட்டின் உள்ளே செல்ல அனுமதிப்பதா, வேண்டாமா என்ற அதிகாரம் இனி குடிநுழைவுத்துறை மூத்த அதிகாரிகளுக்குத்தான் இருக்கும் என்று மலேசியாவின் உள்துறை அமைச்சர் சைஃபுதின் இஸ்மாயில் தெரிவித்ததாக மலாய் மெயில் குறிப்பிட்டு உள்ளது.

மூத்த அதிகாரிகள் என்பவர்கள் கேபி41 என்ற நிலையிலும் அதற்கும் மேற்பட்ட நிலையிலும் இருப்பவர்கள்.

இதுவரை கேபி29 தரநிலையில் உள்ள இளநிலை அதிகாரிகளுக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

வெளிநாட்டினர் மலேசியாவுக்கு வரும்பட்சத்தில் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறும்போது நாட்டின் உள்ளே செல்ல அவர்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை இதுநாள் வரை இளநிலை அதிகாரிகளும் எடுத்து வந்தனர்.

இனிமேல் அந்த அதிகாரம் மூத்த அதிகாரிகளுக்கு மட்டும்தான் இருக்கும் என்று அமைச்சர் புத்ரா ஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணியாற்றும் சில குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடையே ஊழல் கலாசாரம் நிலவுகிறது என்றும் அது பற்றி புலன்விசாரணை நடத்த வேண்டும் என்றும் நாட்டின் சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் ஜூன் 30ஆம் தேதி கோரிக்கை விடுத்து இருந்தார்.

அந்த விமான நிலையத்தில் சீன நாட்டவர் ஒருவருக்கான குடிநுழைவு அனுமதி தொடர்பில் அமைச்சர் தியோங், அந்த விமான நிலையத்தின் வருகைக் கூடத்தில் நுழைந்து இருக்கிறார் என்று முன்னதாகக் கூறப்பட்டது.

அது பற்றி விளக்கம் அளித்த அந்த அமைச்சர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் செல்வதற்கான அனுமதி தனக்கு இருந்ததாக கூறினார்.

மலேசியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமானால் ஆயிரக்கணக்கான ரிங்கிட் பணம் கொடுக்கும்படி தன்னிடம் கூறப்பட்டதாக அந்தச் சீன மாது கூறியதாகவும் அதனையடுத்தே தான் அந்த விவகாரத்தில் தலையிட்டதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதேபோன்ற விவகாரம் தொடர்பில் அந்த விமான நிலையத்திற்கு ஏற்கெனவே நான்கு முறை தான் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தையடுத்து மலேசியாவின் ஊழல் ஒழிப்பு ஆணையம் புலன்விசாரணையைத் தொடங்கியது.

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை திடீரென அந்த விமான நிலையத்திற்குச் சென்று நிலவரங்களைப் பார்வையிட்டார்.

இதனிடையே, புதிய ஏற்பாடுகள் பற்றி தெரிவித்த அமைச்சர் சைஃபுதின், மலேசியாவுக்கு வரும் பயணிகளுக்குத் தகவல் தொடர்பு பிரச்சினை ஏதாவது இருந்தால் அதற்குத் தீர்வு காணும் வகையில் முக்கியமான நுழைவாயில்களில் மொழிபெயர்ப்பாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு வரும் பயணிகள் தாங்கள் எந்தெந்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தும் அறிவிப்புகள் விமானநிலையங்களில் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியதாக மலாய் மெயில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்