ஏர்பஸ் நிறுவனத்துக்கு தருவிப்பு ஆணைகள் குவிந்தன; இந்தியா முக்கிய காரணம்

ஏர்பஸ் நிறுவனத்துக்கு தருவிப்பு ஆணைகள் குவிந்தன; இந்தியா முக்கிய காரணம்

2 mins read
64ed171e-4732-4c34-8c15-74fc1cf8fb64
ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்த 250 விமானங்கள் தேவை என்று கேட்டு வந்த தருவிப்பு ஆணைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் குறிப்பிட்டது.  - படம்: ஊடகம்

பாரிஸ்: இந்தியாவிடம் இருந்து சாதனை அளவுக்கு விமானங்கள் தேவை என்று கோரிக்கைகள் வந்ததை அடுத்து ஏர்பஸ் நிறுவனத்திற்கு தருவிப்பு ஆணைகள் ஜூன் மாதம் பெரிதும் அதிகரித்தன.

அந்த ஐரோப்பிய நிறுவனத்துக்கு இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,044 புதிய தருவிப்பு ஆணைகள் வந்திருப்பதாக வெள்ளிக்கிழமை புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.

இந்தியாவைச் சேர்ந்த இண்டிகோ நிறுவனத்திடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று 500 ஜெட் விமானங்களுக்கான தருவிப்பு ஆணைகளை ஏர்பஸ் நிறுவனம் முறையாக முன்பதிவு செய்து இருக்கிறது.

அதேபோல, ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்த 250 விமானங்கள் தேவை என்று கேட்டு வந்த தருவிப்பு ஆணைகளும் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டது.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து தொழில்துறை உலகிலேயே மிக வேகமாக விரிவடைந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அதைச் சமாளிக்கும் வகையில் இந்திய விமான நிறுவனங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளன.

புதிய விமானங்கள் அதிகமாகத் தேவை என்று கேட்டு சாதனை அளவுக்கு இந்திய நிறுவனங்கள் தருவிப்பு ஆணைகளைத் தாக்கல் செய்து இருக்கின்றன.

அவற்றை நிறைவேற்ற விமான தயாரிப்பு நிறுவனங்கள் பெரிதும் போராடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏர்பஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,080 விமானங்களுக்கான தருவிப்பு ஆணைகள் உறுதியாகி இருக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316 விமானங்கள் வழங்கப்பட்டு இருப்பதாக ஏர்பஸ் கூறி இருக்கிறது.

ஏர்பஸ் நிறுவனத்துக்குச் சென்ற ஆண்டின் முதல் பாதியில் 259 தருவிப்பு ஆணைகள்தான் கிடைத்து இருந்தன.

இந்த ஆண்டில் 720 விமானங்களை வழங்கிவிட வேண்டும் என்று ஏர்பஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்