தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைவீட்டில் தீ: பிள்ளைகளை கீழே தூக்கிப் போட்டு காப்பாற்றிய தந்தை

2 mins read
6853e155-5d4e-47d1-b492-89bd7576436f
மொத்தம் 29 தீயணைப்பாளர்கள் சேர்ந்து தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.   - படம்: ஃபேஸ்புக்

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள மூவார் மாவட்டத்தில் இருக்கும் பெக்கான் லெங்கா என்ற ஊரில் இரண்டு மாடி கடை வீடு ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் தீ மூண்டது.

அந்தக் கடைவீட்டின் மேல் மாடியில் குடியிருந்த சாமிருல் சுகைமி என்பவர் நிலைமையை உணர்ந்துகொண்டு தன்னுடைய 10 வயது மகனையும் நான்கு வயது மகனையும் மேல் மாடியில் இருந்து கீழே தூக்கிப்போட்டார்.

முகம்மது ஃபிராஸ் ஷாமி, 10, முகம்மது ஹாரித், 4, என்ற அந்த இரண்டு சகோதரர்களும் கீழே விழும்போது அவர்களைத் தொழிற்சாலை ஊழியர்கள் இரண்டு பேர் தாங்கி பிடித்துக்கொண்டனர். சகோதரர்கள் இருவரும் காயமின்றி தப்பினர்.

வாகனத்தில் ஏறி வேலைக்குச் செல்வதற்காக அந்த இரண்டு ஊழியர்களும் அப்போது அங்கு காத்திருந்தார்கள்.

தன்னுடைய பிள்ளைகளைக் கீழே தூக்கிப்போட்ட பிறகு திரு சாமிருல், 30, தாமும் கீழே குதித்து தப்பினார். அந்த முயற்சியின்போது துத்தநாக தகடு ஒன்றில் இடித்துக் கொண்டதால் அவரது கையில் காயம் ஏற்பட்டது. கண்கள், கண் புருவம், வாயிலும் தீப்புண்களால் பாதிக்கப்பட்ட அவர், மூவார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திரு சாமிருலின் மனைவியான திருவாட்டி சபிகா பஹாரி, 39, பக்கத்தில் இருக்கும் தன் தாயாரின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். கடையில் காலை உணவுக்கு எல்லாவற்றையும் தயார் செய்து சமைக்க வேண்டி இருக்கும் என்பதால், பொதுவாக என் கணவரும் பிள்ளைகளும் கடையில் தூங்குவார்கள் என்று அந்த மாது குறிப்பிட்டதாக பெரித்தா ஹரியான் நாளிதழ் தெரிவித்தது.

தீ மூண்டபோது திருவாட்டி சபிகா, ஒரு சில தடவை தன்னுடைய கணவரை தொலைபேசியில் அழைத்தார். பிறகு தொழிற்சாலை ஊழியர்களில் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அந்த மாதின் உணவகம் தீப்பிடித்துக்கொண்டதாக அவரிடம் கூறினார்.

அலறல் சத்தம் கேட்டு உறக்கத்தில் இருந்து எழுந்த என்னுடைய கணவர் பாதுகாப்பாக பிள்ளைகளைக் கீழே தூக்கிப்போட்டு காப்பாற்றிவிட்டார் என்றும் அந்த மாது குறிப்பிட்டார்.

தீ மூண்டதால் 10 கடை வீடுகள் அழிந்துவிட்டதாகவும் மொத்தம் 29 தீயணைப்பாளர்கள் சேர்ந்து தீயை அணைத்ததாகவும் பாகோ நகர தீயணைப்பு, மீட்புச் சேவைத் தளபதி முகம்மது ஃபட்லி இஸ்மாயில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்