வாஷிங்டன்: பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ரசாயன ஆயுதங்களின் இறுதித் தொகுதியைப் பாதுகாப்பாக அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அவர் அவ்வாறு அறிவித்தார்.
இது ஒரு மைல்கல் என்று கண்காணிப்பு அமைப்புகள் புகழ்ந்து கூறியுள்ளன.
“இந்த அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன். இதன் மூலம் ரசாயன ஆயுதங்களால் ஏற்படக்கூடிய பேரழிவிலிருந்து பாதுகாப்பு பெற்ற உலகம் என்ற நிலையை நோக்கி நாம் மேலும் ஓர் அடி முன்னேறியிருக்கிறோம்,” என்று அதிபர் பைடன் கூறினார்.
அனைத்துலக ரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தம் 1997ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது. ரசாயன ஆயுதங்களின் கையிருப்பு குறித்து தகவல் வெளியிட்ட நாடுகள் அவற்றை இனி தயாரிக்கவோ மேம்படுத்தவோ சேமிக்கவோ பயன்படுத்தவோ போவதில்லை என்று அதில் கையெழுத்திட்டிருந்தன.
அவற்றில், சேமிப்பிலிருந்த ரசாயன ஆயுதங்களை முற்றிலும் பாதுகாப்பாக அழித்த இறுதி நாடு அமெரிக்கா.
அமெரிக்காவின் அண்மை அறிவிப்பைத் தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்திலும் ரசாயன ஆயுதங்கள் ஏதும் தற்போது இல்லை என்று நம்பப்படுவதாக ‘ஓபிசிடபிள்யூ’ எனப்படும் ரசாயன ஆயுதத் தடை அமைப்பு கூறியது.
முதல் உலகப் போரில் ரசாயன நச்சு வாயுக்களைப் பயன்படுத்தியதால் பல்லாயிரக் கணக்கானோர் மாண்டது குறிப்பிடத்தக்கது.