சாவ் பாலோ: பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரெசிஃபே நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்டோரில் இருவர் பிள்ளைகள். அவர்களின் வயது முறையே 5, 8.
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.35 மணியளவில் அந்த நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது குடியிருப்பாளர்கள் சிலர் உறங்கிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இரவு 9.30 மணி நிலவரப்படி நால்வர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக பிரேசிலின் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் கூறினர்.
கட்டடம் இடிந்ததற்கான காரணம் குறித்துத் தெளிவான தகவல் இல்லை.
கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் ரெசிஃபே நகரில் அண்மை நாள்களாக கனமழை பெய்துவருகிறது. அதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அந்நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விழிப்புநிலை அறிவிக்கப்பட்டது.

