நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

2 mins read
b95b96b8-865a-4c39-af8e-632c522fe0b3
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்ட தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மூன்று நாள்களாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் வெற்றி இல்லை. - படம்: இபிஏ

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது. புகலிடக் கொள்கை தொடர்பில் கூட்டணிக் கட்சிகள் இடையில் பிணக்கம் ஏற்பட்டதை அடுத்து அரசாங்கம் கவிழ்ந்துவிட்டதாக பிரதமர் மார்க் ருட்ட தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் தலைமையில் வெள்ளிக்கிழமை நான்கு கட்சிகள் கூட்டம் நடந்தது. அதில் இணக்கம் ஏற்படவில்லை.

நெதர்லாந்து அரசாங்கம் அமைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் குடிநுழைவு தொடர்பில் சில காலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

ஆட்சி கவிழ்ந்துவிட்ட சூழலில் நவம்பர் மாதம் புதிய தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன.

திரு ருட்டவின் விவிடி கட்சி, நாட்டில் புகலிடம் நாடி வருவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முயன்று வந்திருக்கிறது.

நெதர்லாந்தில் ஓராண்டுக்கு முன் குடிநுழைவு முகாம்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பிரச்சினை மூண்டது.

திரு ருட்டவின் கொள்கையை அவருடைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இதர மூன்று கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.

திரு ருட்ட வெள்ளிக்கிழமை அவசரம் அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.

அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது என்று அப்போது அவர் தெரிவித்தார்.

தனது பதவி விலகல் கடிதத்தை சனிக்கிழமை மன்னரிடம் தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் முடியும்வரை காபந்து அரசாங்கம் பதவியில் இருக்கும் என்றும் அதில் தமது இப்போதைய அமைச்சர்கள் தொடர்ந்து இடம்பெற்று சேவையாற்றி வருவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நெதர்லாந்தில் அடைக்கலம் நாடி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 47,000 ஆகக் கூடியது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் ஏறக்குறைய 70,000 ஆக ஆகும் என்று அரசாங்கப் புள்ளிவிவரங்கள் ஏற்கெனவே தெரிவித்து இருக்கின்றன.

திரு ருட்ட ஒரு திட்டத்தின் மூலம் புகலிடம் நாடுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முயன்றார். நெதர்லாந்துக்குள் ஒரு மாதத்திற்கு போர் அகதிகளின் உறவினர்கள் 200 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று அவர் வரம்பு விதித்தார்.

ஆனால், இந்த முடிவை அவருடைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இதர மூன்று கட்சிகளும் வலுவாக நிராகரித்துவிட்டன.

அமைச்சரவையைக் கலைப்பது என்ற முடிவு, மிகவும் சிரமத்துடன் எடுக்கப்பட்ட ஒன்று என்று திரு ருட்ட செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளிடம் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைய முடியவில்லை என்றாரவர்.

திரு ருட்ட, 56, நெதர்லாந்தில் ஆக அதிக காலம் சேவையாற்றியுள்ள பிரதமராக இருக்கிறார். அவர் 2010 முதல் பிரதமராக இருந்து வருகிறார். இப்போதைய அரசாங்கம் 2022 ஜனவரியில் பொறுப்பேற்றுக் கொண்டது. இது திரு ருடேவின் நான்காவது கூட்டணி அரசாகும்.

குறிப்புச் சொற்கள்