காவல்துறை வன்செயல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

2 mins read
49a84048-866a-4ee0-976b-c1b5e02d13e3
பிரான்சில் காவல்துறையினரின் வன்செயல்களைக் கண்டிக்கும் விதமாக வாரயிறுதியில் புதிய ஆர்ப்பாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரான்சில் காவல்துறையினரின் வன்செயல்களைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்குமுன் தடுப்புக் காவலில் இருந்தபோது அடாமா டாவோரே எனும் கறுப்பின ஆடவர் மாண்டார். அவரை நினைவுகூரும் விதமாக நினைவஞ்சலிப் பேரணி நடத்த அவரது சகோதரி திட்டமிட்டார் . அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆர்வலர்கள் திட்டமிடுகின்றனர்.

சென்ற வாரம் போக்குவரத்து சாலைச் சந்திப்பு ஒன்றில் காவல்துறையினர் சுட்டதில் காரை ஓட்டிச் சென்ற நஹேல் எம் எனும் 17 வயது இளையர் மாண்டார். அதன் தொடர்பில் பதற்றம் அதிகரித்துள்ள வேளையில், டாவோரே நினைவஞ்சலிப் பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து பேரணி நடைபெறாது என்று உறுதிப்படுத்திய டாவோரேயின் அக்கா திருவாட்டி அஸ்ஸா டாவோரே, அரசாங்கம் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்க்க முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். தனது தம்பியின் மரணத்துக்கு மரியாதை தரக்கூடாது என்று அரசாங்கம் முடிவு செய்திருப்பதை இது காட்டுவதாக அவர் சொன்னார்.

எனவே சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மற்றொரு பேரணியில் கலந்துகொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

நீதி கோரும் அந்தப் பேரணியும் தடை செய்யப்படும் என்று பாரிஸ் காவல்துறைத் தலைமையகம் கூறியது.

டாவோரே நினைவஞ்சலிப் பேரணியில் கலந்துகொள்ளும்படி சில தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை தங்கள் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. 2016ல் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அந்த 24 வயது இளையர் மாண்டுவிட்டார்.

ஜூன் 27ஆம் தேதி நஹேல் எம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கலந்துகொண்ட 3,700க்கு மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 1,160 பேர் 18 வயதுக்குக் குறைவான வயதுடையோர்.

காவல்துறையின் வன்செயல்களை எதிர்க்கும் விதமாக, பிரான்சில் இந்த வாரயிறுதியில் ஏறக்குறைய 30 ஆர்ப்பாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்