சீக்கியத் தலைவர் கொலை; டொரொன்டோவில் ஆர்ப்பாட்டம்

சீக்கியத் தலைவர் கொலை; டொரொன்டோவில் ஆர்ப்பாட்டம்

2 mins read
7f2027a8-190a-4785-b273-c4b6b2c79013
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரைக் கைதுசெய்யும் காவல்துறை அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டொரொன்டோ: கனடாவின் வான்கூவர் நகர்ப் பகுதியில் சீக்கியத் தலைவர் ஒருவர் ஜூன் மாதம் கொல்லப்பட்டார்; இன்னும் முழு விவரங்கள் இல்லாத அச்சம்பவத்தின் தொடர்பில் கனடாவில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டொரொன்டோ நகரின் இந்தியத் தூதரகத்துக்கு வெளியே சனிக்கிழமையன்று அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திரு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசாங்கம்தான் பொறுப்பு என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் வாதம். திரு நிஜ்ஜார், ஒரு சீக்கிய ஆலயத்தின் தலைவராக இருந்தார்.

அவர், சீக்கியர்களுக்கென தனி நாடு வேண்டும் என்று இருந்துவரும் போராட்டத்துக்குக் குரல் கொடுத்தவர். அவ்வாறு உருவாகும் நாட்டுக்கு காலிஸ்தான் என்று பெயர் சூட்டவேண்டும் என்பது போராட்டத்துக்குக் குரல் கொடுப்போரின் விருப்பம்.

“இந்திய அமைப்பும் கட்டமைப்பும் குற்றம் செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களைப் (இந்திய அரசாங்கத்தினர்) பொறுப்பேற்கச் செய்யவேண்டும்,” என்று ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னால் இருக்கும் ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் பேச்சாளர் குல்ஜீத் சிங், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’, அமெரிக்காவில் இயங்கும் அமைப்பு.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திரு நிஜ்ஜார், தேடப்பட்டுவரும் ஒரு பயங்கரவாதி என்று இந்தியா வகைப்படுத்தியது. வான்கூவர் நகரில் இருக்கும் சரீ பகுதியில் ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலிருந்து சில பகுதிகளை இணைத்து புதிய நாடு ஒன்றை உருவாக்குவதற்கு திரு நிஜ்ஜார் குரல் கொடுத்து வந்தார்.

திரு நிஜ்ஜார் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா குற்றஞ்சாட்டியது. அதை அவர் மறுத்து வந்தார்.

வான்கூவரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரில் பெரும்பாலோர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் போராட்டத்தைச் சித்திரிக்கும் நீல நிற சின்னங்களைக் கொண்ட மஞ்சள் கொடிகளை ஏந்திய அவர்கள் ‘காலிஸ்தான்! காலிஸ்தான்!’ என்று கத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்