மாஸ்கோ: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ தற்காப்பு உடன்பாட்டு நாடுகள் இந்த வாரம் சந்திக்கும்போது உக்ரேனின் சாபோரிஸ்சியா அணுசக்தி ஆலை பற்றி விவாதிக்க வேண்டும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் மரியா சகரோவா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
நேட்டோ தலைவர்கள் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வில்னியஸ் நகரில் உச்சநிலை சந்திப்பு நடத்தி பல விவகாரங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.
உக்ரேன் நன்கு திட்டமிட்டு அந்த அணு ஆலைக்குச் சேதம் ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்த ரஷ்ய அமைச்சர், நேட்டோ உச்சநிலை மாநாடு அது பற்றி முக்கியமாக விவாதிக்க வேண்டும் என்றார்.
அந்த அணு ஆலைக்கு ஏதாவது பாதிப்பு நிகழ்ந்தால் அதனால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருப்பவர்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள்தான் என்பதை ரஷ்ய அமைச்சர் டெலிகிராம் செய்தியில் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணு ஆலையான சாபோரிஸ்சியா ஆலை, நேட்டோ மாநாடு நடக்கும் வில்னியஸ் நகருக்குச் சுமார் 1,000 கிமீ தொலைவில் இருக்கிறது.
உக்ரேனின் சாபோரிஸ்சியா வட்டாரத்தில் ரஷ்யா வசம் இருக்கும் பகுதியில் அந்த ஆலை அமைந்துள்ளது. அதற்கு அருகேதான் ரஷ்யா- உகரேன் தரப்புகள் மோதி வருகின்றன.
அந்த ஆலைக்குப் பெரும் மிரட்டல் ஏற்பட்டு விட்டது என்று உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி பல நாள்களாக எச்சரித்து வருகிறார்.
அந்த ஆலையில் உள்ள பல உலைகளின் உச்சிக்கூரையில் கண்ணி வெடிகளை ரஷ்யா வைத்திருக்கிறது என்றும் அதிபர் எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அந்த ஆலையில் தளம் கொண்டுள்ள அனைத்துலக அணுசக்தி முகவை அமைப்பின் வல்லுநர்கள், அந்த ஆலையில் கண்ணிவெடியோ வேறு ஏதாவது வெடிபொருளோ வைக்கப்பட்டு இருக்கிறதா, இல்லையா என்பதை இனிமேல்தான் தாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அந்த ஆலையை அலசி ஆராய தங்களுக்கு மேலும் அனுமதி தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

