பெய்ஜிங்: சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு விரைவுச்சாலையில் நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நடந்த இடத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏழு பேரைக் காணவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ஆறு பேர் உயிரோடு மீட்கப்பட்டதாக ஹூபெய் மாநில அரசாங்க அதிகாரிகள், அந்த மாநிலத்தின் விசாட் தளத்தில் கூறினர்.
தாங்கள் பல முயற்சிகளையும் மேற்கொண்டு அந்தப் பகுதியில் இதர பேரிடர் எதுவும் நிகழாமல் தடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியும்படி சீனாவின் அவசரகால நிர்வாக அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சு, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நான்கு அவசரகால உதவிக் குழுக்களை அனுப்பியது.

