கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்துவது குறித்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அது குறித்து ஆலோசித்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளை விமான நிலையத்தில் பணியில் நிறுத்துவதன் முக்கியத்துவத்தை ஊழல் தடுப்பு ஆணையம் ஆராயும் என்று தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி, சினார் ஹரியான் நாளிதழிடம் தெரிவித்தார்.
“விமான நிலையத்தில் தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை தேவையா என்பது ஆலோசிக்கப்படும்,” என்று திரு அஸாம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளை நிறுத்தலாம் என்று மலேசியாவின் சுற்றுப்பயண, கலை, கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று பரிந்துரைத்திருந்தார். விமான நிலையத்தின் குடிநுழைவு அதிகாரிகளிடையே ஊழல் கலாசாரம் இருந்து வருவதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் விமான நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்த நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.
தமது அதிகார வரம்புக்கு அப்பால் சென்று கோலாலம்பூர் விமான நிலையத்தின் பயணிகள் வந்து சேரும் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட ஒரு சுற்றுப்பயணிக்குத் திரு தியோங் உதவியதாகச் சொல்லப்பட்டது. அதற்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
திரு தியோங் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து தங்களுக்குள் விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ அன்றைய தினமே சொன்னார்.
ஜூலை நான்காம் தேதியன்று இதன் தொடர்பான விசாரணைகளை அவர் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தார். தவறாக நடந்துகொள்ளும் எந்த குடிநுழைவு அதிகாரியையும் ஆணையம் விட்டு வைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கோலாலம்பூர் விமான நிலைய குடிநுழைவு அதிகாரிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக ஊழல் தடுப்பு ஆணையம் சனிக்கிழமையன்று தெரிவித்தது.

