சியாங் மாய்: தாய்லாந்தைச் சேர்ந்த லாய் சாக் சூரின் என்ற யானைக்கு இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் சீழ் பிடித்து இருந்தது. இப்போது அந்த யானை குணமடைந்து வழக்கநிலைக்குத் திரும்புகிறது என்று அதற்குச் சிகிச்சை அளித்த வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இலங்கைக்கு 2001ஆம் ஆண்டு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட மூன்று யானைகளில் ஒன்றான அந்த யானை, இப்போது தெற்கு சியாங் மாயில் லாம்போங் நகரில் இருக்கும் யானை பாதுகாப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு இப்போது 29 வயதாகிறது. அந்த யானைக்கு 10 வயதாக இருந்தபோது அது இலங்கைக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.
அந்த யானைக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து சென்ற ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்துக்கு அது திரும்பி வந்தது. யானைக்குச் சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டதன் தொடர்பில் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் அரசதந்திர பிரச்சினை ஏற்பட்டது.
அந்த யானை 30 நாள்கள் தனித்து வைக்கப்படும். 15வது நாளிலும் 30வது நாளிலும் மறுபடியும் பரிசோதிக்கப்படும் என்று டாக்டர் சரண் சன்சிட்டிவெஜ் கூறினார்.

