தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர்-சிங்கப்பூர் புதிய படகுச் சேவைப் பற்றி விவாதிப்பு

2 mins read
c8189e99-972f-43cb-ac1f-86fff50b5175
சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் (இடது), மலேசியாவின் ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி இருவரும் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட புதிய படகுச் சேவை சாத்தியம் பற்றி விவாதித்தனர். - படம்: ஜோகூர் முதல்வர் அலுவலகம் 

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநில முதல்வரும் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் பொது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒரு புதிய படகுச் சேவை சாத்தியம் பற்றி அண்மையில் விவாதித்தனர்.

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனும் ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியும் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆராய்ந்தனர்.

ஜோகூர் முதல்வர் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ வருகையளித்திருந்தார். அந்த வருகை சனிக்கிழமை முடிவடைந்தது. அப்போது இது பற்றி விவாதிக்கப்பட்டது.

ஜோகூர் பாருவில் இஸ்கந்தர் புத்ரியில் உள்ள புத்ரி துறைமுக அனைத்துலக முனையத்தில் இருந்து சிங்கப்பூரில் உள்ள துவாசுக்குப் படகுச் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியம் பற்றி தாங்கள் விவாதித்ததாக ஜோகூர் முதல்வர் தெரிவித்தார்.

அத்தகைய ஒரு சேவை ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் போக்குவரத்துக்கு நிலத்தைச் சார்ந்திருப்பதை அந்தச் சேவையின் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.

அதோடு மட்டுமன்றி, அத்தகைய ஒரு படகு சேவையின் மூலம் வர்த்தகத் துறையில் தளவாடப் போக்குவரத்துக்குக் கணிசமான அளவுக்குப் பலன்கள் ஏற்படும். அது இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய ஒரு படகுச் சேவை பற்றி முதன்முதலாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாதிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு அந்தச் சேவை பற்றி தாங்கள் இருவரும் ஆழமாக விவாதித்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.

அந்தத் திட்டம் எப்போது தொடங்கும் என்பதற்கான திட்டவட்டமான தேதியைத் தெரிவிக்க இப்போது தன்னால் இயலவில்லை என்று குறிப்பிட்ட முதல்வர், அதன் தொடர்பில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டி இருக்கிறது என்றார்.

சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான போக்குவரத்துக்கு ஜோகூர் தரைப்பாலமும் இரண்டாவது இணைப்புப் பாலமும் இப்போது மிக முக்கிய தரை வழிகளாக இருக்கின்றன.

ஜோகூர் தரைப்பாலம் வழியாக ஜோகூரில் இருந்து அன்றாடம் 300,000க்கும் மேற்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வந்து செல்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்