கியவ்: உக்ரேனின் ஆயுதத் துறையை மேற்பார்வையிடும் பொறுப்பை தாம் ஏற்ற சில மாதங்களிலேயே, கூடுதலான ஆயுதங்களை உக்ரேன் தயாரித்துள்ளதாக திரு ஒலெக்ஸாண்டர் கமிஷின் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைவிட கடந்த ஜூன் மாதம் மட்டும் கூடுதல் ஆயுதங்களை உக்ரேன் தயாரித்ததாக அவர் சொன்னார்.
ரஷ்ய ஏவுகணைகளால் அவரது ஆயுத உற்பத்தி ஆலைகள் பலவும் தாக்கப்பட்டு வரும் வேளையில் ஆயுத உற்பத்தி அதிகப்படுத்தப்படுவது உக்ரேனுக்கு வெற்றியைத் தந்தாலும், இதில் தாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருப்பதாக திரு கமிஷின் கூறினார்.
“மூன்று மாதங்களில் ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்தியதில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம் என்று நான் கூற மாட்டேன். ஏனெனில் கடந்த ஆண்டு நாங்கள் அவ்வளவாக ஆயுதங்களைத் தயாரிக்கவே இல்லை,” என்று கியவ்வில் தமது அலுவலகத்தில் அளித்த பேட்டியில் திரு கமிஷின் சொன்னார்.
பல்லாண்டு காலமாக ஊழல், செயல்திறன் குறைபாடு நிரம்பிய உக்ரேனின் தற்காப்புத் துறையை மறுசீரமைத்து போர் முயற்சியின் இயந்திரமாக்க அவர் இலக்கு கொண்டுள்ளார்.

