தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாடிக்கையாளர்கள் கண்டுகொள்ளாததால் கொள்ளை முயற்சி தோல்வி

1 mins read
978cef96-f90b-48d3-ae49-7cd31115baa3
கடையில் இருந்த மகளிர், ஆடவனின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. எதுவும் செய்யாமல் அவர்கள் அப்படியே அமர்ந்திருந்தனர். - படம்: கிரைம் ஸ்டாப்பர்ஸ் கிரேட்டர் அட்லாண்டா/ஃபேஸ்புக்

அட்லாண்டா: கொள்ளையனை எதிர்நோக்கும்போது பெரும்பாலானோர் கூச்சலிடுவர் அல்லது பதற்றம் அடைவர்.

ஆனால், அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம், அட்லாண்டாவில் விரல் நகங்களுக்கு ஒப்பனை செய்யும் கடைக்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடிக்க முற்பட்ட ஒருவனை அங்கிருந்தவர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஜூலை 3ஆம் தேதி அக்கடைக்குள் நுழைந்த அந்த ஆடவன், அங்கிருந்தவர்களை நோக்கி கூச்சலிட்டான். அப்போது அக்கடையில் மகளிர் மூவரும் முகப்பில் ஆடவர் ஒருவரும் இருந்தனர்.

பை ஒன்றை வைத்திருந்த அந்தச் சந்தேக ஆடவன், தம்மிடம் பணத்தைத் தருமாறு அங்கிருந்தவர்களிடம் கேட்டான்.

“அனைவரும் கீழே குனியுங்கள்! பணம் அனைத்தையும் என்னிடம் தாருங்கள்! உங்கள் பாக்கெட்டுகளைக் காலி செய்யுங்கள்” என்று அந்த ஆடவன் கத்தினான்.

ஆனால், அங்கிருந்த மகளிர் அவனது கோரிக்கைக்கு இணங்கவில்லை. எதுவும் செய்யாமல் அவர்கள் தொடர்ந்து அமர்ந்திருந்தனர்.

முகப்பில் நின்றுகொண்டிருந்த ஆடவர் ஒருவர் தொலைபேசி அழைப்பு மேற்கொள்வதாகத் தெரிகிறது. அவரை நோக்கிச் சென்ற சந்தேக ஆடவன், தம்மிடம் பணத்தைத் தருமாறு கேட்டான். எனினும், அவன் கேட்டதைத் தராமல் அவர் தொடர்ந்து தொலைபேசியில் இருப்பது தெரிகிறது.

“அனைவரும் என்னிடம் அனைத்தையும் கொடுங்கள். பணம் எங்கே? என்று அந்த ஆடவன் தொடர்ந்து கூச்சலிட்டான்.

தமது கோரிக்கைக்கு எவரும் இணங்காததால், கடையிலிருந்து அவன் புறப்பட்டுச் சென்றான்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து அந்த ஆடவன் குறித்த தகவலைக் கோருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்