குடியுரிமைச் சட்ட மாற்றம் செப்டம்பரில் தாக்கல் செய்யப்படும்

குடியுரிமைச் சட்ட மாற்றம் செப்டம்பரில் தாக்கல் செய்யப்படும்

2 mins read
3f27cec7-084b-4f2b-b0bd-80ad9b2ba58c
சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்த மாநில மன்னர்களின் அனுமதி கோரப்படும் என்றார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியத் தாய்மார்கள் வெளிநாடுகளில் குழந்தை பெற்றெடுக்கும்போது அக்குழுந்தைகளுக்கு மலேசியக் குடியுரிமை வழங்குவது தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது.

இந்த சர்ச்சைக்குத் தீர்வு காணும் வகையில் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்த மாநில மன்னர்களின் அனுமதி கோரப்படும் என்றார் அவர்.

சட்டத் திருத்தப் பரிந்துரைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக திரு அன்வார் கூறினார். பரிந்துரை ஏற்கப்பட்டதும் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

குடியுரிமை பெறாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறார் அவதியுறுவதாகவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சட்டத் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை மலேசிய அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கெரன் சியா தெரிவித்தார்.

இதற்கிடையே, குடியுரிமை பெறாத சிறுவர்கள் படும் வேதனை, எதிர்கொள்ளும் சிரமங்களைக் களைய திரு அன்வார் தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை மலேசிய ஜனநாயக, பொருளியல் விவகாரக் கழகத்தின் தலைவர் துங்கு சைனால் அபிடின் துவான்கு முரிஸ் பாராட்டினார்.

இருப்பினும், இதுதொடர்பான சட்டத் திருத்தங்களை மிகுந்த கவனத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

புதிய சட்டத் திருத்தங்கள் காரணமாகப் பெற்றோரின் பெயர் அறியாத, குடியுரிமை இல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கக்கூடும் என்று இதற்கு முன்பு பல்வேறு மனி்த உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியிருந்தன.

ஆனால் சட்டத் திருத்தங்கள் எவ்வித சர்ச்சையையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் அன்வார் உறுதி அளித்தார். மலேசியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் மாற்றம் பலனளிக்கும் என்றார் அவர்.

வெளிநாடுகளில் மலேசியத் தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்ற அடிப்படையில் மலேசியக் குடியுரிமை கோரி 688 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுட்டியோன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும் பலர் விண்ணப்பம் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியக் குடியுரிமை கோரி இதுவரை 150,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை குடியுரிமை பெறாத சிறார், திருமணமாகாதவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்