2075ல் அமெரிக்காவை விஞ்சி இந்தியாஉலகின் ஆகப்பெரிய பொருளியலாகும்

2075ல் அமெரிக்காவை விஞ்சி இந்தியாஉலகின் ஆகப்பெரிய பொருளியலாகும்

2 mins read
5ebb7f9d-8065-4784-bfc5-514eed2b48eb
இப்போது 5வது ஆகப்பெரிய பொருளியல் நாடாக இருக்கும் இந்தியா, 2075ல் அமெரிக்காவை விஞ்சி உலகின் ஆகப்பெரிய பொருளியலாகும்.  - படம்: இந்திய ஊடகம் 

நியூயார்க்: இந்தியா, 2075ஆம் ஆண்டில் அமெரிக்காவையே விஞ்சி உலகின் ஆகப்பெரிய பொருளியலாகத் திகழும் என்று கோல்டுமென் சச்ஸ் முதலீட்டு வங்கி கணித்துள்ளது.

ஜப்பான், ஜெர்மனி நாடுகளின் பொருளியல்களையும் இந்தியா முந்திவிடும் என்று அது குறிப்பிட்டு உள்ளது. இந்தியா இப்போது உலகின் 5வது ஆகப்பெரிய பொருளியல் நாடாக இருக்கிறது.

என்றாலும் இந்தியாவில் பொருளியலில் தொழிலாளர் ஈடுபாட்டு விகிதம் கூடவில்லை என்றால் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அந்த வங்கியின் அறிக்கை எச்சரித்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவதற்கு முக்கியத்துவம் அளித்து இந்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

நாட்டில் சாலைகள், ரயில்வே கட்டமைப்புகள்மேம்பட்டு வருகின்றன என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்தியாவில் அனுகூலமான மக்கள் வளம் இருக்கிறது. புத்தாக்கம், தொழில்நுட்பப் பெருக்கம், அதிக முதலீட்டுப் புழக்கம், ஊழியர் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவை இந்தியப் பொருளியலை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டவை என்று அறிக்கை கூறியது.

அடுத்த இருபது ஆண்டுகளைப் பார்க்கையில் வட்டார நாடுகளிலேயே இந்தியாதான் அதிக சுயசார்புடன் இருக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

கோல்டுமென் சச்ஸ் வங்கி ஆய்வுப் பிரிவின் இந்திய பொருளியல் வல்லுநர் சந்தானு சென்குப்தா, இந்தியாவில் அதிகரித்து வருகின்ற உற்பத்தித்திறனும் முதலீட்டுப் பெருக்கமும் வரும் ஆண்டுகளில் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கும் என்றார்.

இந்தியாவின் சுயசார்பு நிலை மேம்படுகிறது. அந்த நாட்டில் வருவாய் கூடுகிறது. நிதித்துறை பெரும் வளர்ச்சி கண்டுவருகிறது. இவற்றின் விளைவாக நாட்டின் சேமிப்பு கூடுகிறது. இது மேலும் கணிசமான முதலீடுகளுக்கு வகை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டின் தனியார் துறை, நிலைமையை நன்கு உணர்ந்துகொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, உற்பத்தி, சேவைத் துறையைப் பெருக்கி, அதிக வேலைகளை உருவாக்கி, அதிகமான ஊழியர்களை வேலைகளில் சேர்க்கவேண்டும் என்று வங்கியின் அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இறங்குமுகமாகி வந்துள்ளது. ஊழியர் அணியில் ஆண்கள் அளவுக்குப் பெண்கள் இல்லை என்பதைச் சுட்டிய அறிக்கை, ஊழியர் அணி விரிவடைந்தால்தான் இந்தியப் பொருளியல் கிடுகிடுவென வளரும் என்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்