பியோங்யாங்: விமானங்களையும் வானூர்திகளையும் தனது வான்வெளிக்குள் அனுப்பி அமெரிக்கா வேவுபார்க்க முயல்வதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இதனை அமெரிக்கா தொடர்ந்து செய்தால் அந்த விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
மேலும், அணுவாயுதப் போர் ஏற்படும் அபாயமும் அதிகமாகவுள்ளது என்றும் அது கூறியதாக அந்நாட்டின் கேசிஎன்ஏ ஊடகம் குறிப்பிட்டது.
வானத்திலிருந்து தன் நாட்டை உற்றுநோக்கும் விமான வகைகளையும் அணுவாயுதங்கள் பொருத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களையும் அமெரிக்கா பயன்படுத்தி வருவதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் குற்றச்சாட்டுகள் முகாந்தரமற்றவை எனத் தெரிவித்துள்ள அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு, அனைத்துலகச் சட்டத்தைத் தான் மீறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
நிலைமையை மோசமாக்கும் செயல்களில் ஈடுபடாமல் உண்மையான, நீடித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும்படி வடகொரியாவை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.