இஸ்தான்புல்: நேட்டோ அமைப்பில் சேர சுவீடன் முன்வைத்த விண்ணப்பத்தை வழிமொழிய பல மாத இழுபறிக்குப் பிறகு துருக்கி இசைந்துள்ளது.
ராணுவப் பங்காளித்துவங்களைச் சாராத கொள்கையைக் கொண்டிருந்த சுவீடனும் பின்லாந்தும் உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, 2022ல் நேட்டோவில் உறுப்பினராக இணைய விண்ணப்பித்தன.
ரஷ்யாவின் ராணுவ வலிமைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது நேட்டோ. பின்லாந்து இவ்வாண்டு ஏப்ரலில் உறுப்பினராக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சுவீடனின் விண்ணப்பத்தை உடனே வழிமொழியாமல் துருக்கியும் துருக்கிக்கு ஆதரவான ஹங்கேரியும் கடந்த நான்கு மாதங்களாகத் தங்கள் முடிவைத் தள்ளிவைத்தன.
‘பிகேகே’ எனப்படும் குர்திஸ்தான் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்தோரை பயங்கரவாதிகள் என வகைப்படுத்திய துருக்கி, அவர்களுக்கு எதிராக சுவீடன் போதிய அளவில் செயல்படவில்லை எனக் கூறி வந்தது. துருக்கியும் ஹங்கேரியும் தற்போது எடுத்துள்ள முடிவை சுவீடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.


