பிரபோவோவுக்கான ஆதரவு வலுக்கிறது

பிரபோவோவுக்கான ஆதரவு வலுக்கிறது

3 mins read
3b7fc75c-a77e-47f3-96ca-fd3d37e9e2c2
மூன்றாவது முறையாக இந்தோனீசிய அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் திரு பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோ திட்டமிட்டுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில் அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு கடந்த மே மாதம் 30ஆம் தேதிக்கும் கடந்த மாதம் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்டது. அதில் இந்தோனீசியாவில் உள்ள பல பகுதிகளைச் சேர்ந்த 1,200 பேர் பங்கெடுத்தனர்.

முன்னாள் ராணுவ சிறப்புப் படைத் தளபதியான திரு பிரபோவோ கடந்த இரண்டு அதிபர் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தற்போதைய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை திரு பிரபோவோவுக்குக் கூடுதல் ஆதரவு கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவருக்கு 34.3 விழுக்காடு இந்தோனீசியர்கள் ஆதரவு வழங்குவதாக இம்மாதம் 10ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் அவருக்கு 33.9 இந்தோனீசியர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சர் பிரனோவோவுக்குக் கிடைத்த ஆதரவைவிட அதிகம்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் இந்தோனீசிய அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் 71 வயது திரு பிரபோவின் நிலை வலுவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு கஞ்சர் 32.7 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்திலும் முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் திரு அனீஸ் பஸ்வெடான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

“இந்தோனீசியர்களுக்குத் தம்மீது உள்ள அபிப்ராயத்தை மாற்றியமைக்கும் வகையில் கடந்த ஓராண்டாக திரு பிரபோவோ செயல்பட்டு வந்துள்ளார். இளையர்களின் ஆதரவைப் பெற அவர் தீவிரமாகச் செயல்பட்டார். இதன் விளைவாக அவருக்கான ஆதரவு வலுவடைந்துள்ளது. ஆய்வின் முடிவுகளின்படி அவருக்குத்தான் ஆக அதிகமான ஆதரவு உள்ளது.

“அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் இணைந்து செயல்பட அவர் கையாண்ட உத்தி அவருக்குப் பலன் அளித்துள்ளது. இந்தோனீசியர்களிடையே அவர் பிரபலம் அடைந்துள்ளார்,” என்று தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உத்திகள், அனைத்துலகக் கல்வி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் திரு டி. நிக்கி ஃபரிசால் தெரிவித்தார்.

இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று திரு ஜோக்கோ விடோடோ அதிபராகப் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

திரு ஜோக்கோ விடோடோ யாருக்கு ஆதரவு வழங்குகிறாரோ அந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகப் பதவி வகிப்பார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ஆளும் கட்சியின் வேட்பாளராக திரு கஞ்சரை அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் தற்காப்பு அமைச்சரான திரு பிரபோவுக்கு அவர் ஆதரவு அளிக்கக்கூடும் என்று திரு ஜோக்கோ விடோடோவுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் திரு ஜோக்கோ விடோடோவும் திரு பிரபோவோவும் குறைந்தது மூன்று முறை சந்தித்துவிட்டனர். கடந்த மாதம் 18ஆம் தேதியன்று இருவரும் சந்தித்துப் பேசினர். அரசியல் விவகாரங்கள் பற்றி திரு பிரபோவோவுடன் கலந்துரையாடியதாக திரு ஜோக்கோ விடோடோ செய்தியாளர்களிடம் அப்போது தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்