லண்டன்: பிபிசி வானொலிப் படைப்பாளர் ஜெரமி வைன் தற்போது நடந்துகொண்டிருக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள படைப்பாளர் தம்மை வெளிப்படுத்தவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அது அவரது முடிவாக இருந்தாலும், அவர் இப்போதே முன்வரவேண்டும் என்றார் திரு வைன்.
இந்த விவகாரத்தினால் பிபிசிக்கும் அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திரு வைன் கூறினார்.
அந்தப் படைப்பாளரின் பெயர் பொதுவெளியில் தெரிவிக்கப்படாதது மற்ற பிபிசி படைப்பாளர்களைப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த ஆண் படைப்பாளர், பாலியல் ரீதியான புகைப்படங்களுக்குக் கைம்மாறாக பதின்ம வயதினர் ஒருவரிடம் பத்தாயிரக்கணக்கான பவுண்டு கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அந்தப் படைப்பாளர் செயலி ஒன்றின் வழியாக கோபமான, தகாத வார்த்தைகளைக் கொண்ட செய்திகளைத் தம்மிடம் அனுப்பியிருப்பதாக மற்றொரு நபர் புகார் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து துரிதமான, தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் கூறியிருக்கிறார்.

