கோலாலம்பூர்: மலேசியாவில் ‘3ஆர்’ என்று குறிப்பிடப்படும் இனம், சமயம், அரச விசுவாசம் ஆகியவை தொடர்பான விவகாரங்களைக் கையாளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் ஒரு புதிய சட்டம் பற்றி ஆராய்ந்து வருகிறது.
சமூகப் பதற்றத்தைத் தூண்டிவிடுவோருக்குக் குடிமைத் (சிவில்) தண்டனை விதிக்க அந்தச் சட்டம் வழிவகுக்கும்.
அந்தப் புதிய உத்தேச சட்டத்திற்கு ‘மாநில, தேசியச் சட்டம்’ என்று பெயரிடப்படும் வாய்ப்பு இருக்கிறது.
அது, சிங்கப்பூரின் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தைப் போன்றதாகவும் அதேவேளையில் மலேசியாவிற்குத் தோதானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் அலுவலக (சட்ட, தொழில்துறை சீரமைப்பு) அமைச்சர் அசாலினா உத்மான் புதன்கிழமை தெரிவித்தார்.
இப்போது 3ஆர் விவகாரங்கள் தொடர்பான எந்தக் குற்றச்செயலும் தேசத்துரோகச் சட்டம் 1948ன் கீழ் புலன் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. குற்றவாளிக்கு அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
தேசத்துரோகச் சட்டத்தின்கீழ் புலன்விசாரணைகளும் குற்றத்தீர்ப்பும் இடம்பெற நெடுங்காலம் பிடிக்கிறது என்பதைச் சுட்டிய அமைச்சர், இதற்குத் தீர்வு காணப்பட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்தார்.

