ஜகார்த்தா: தென்கிழக்காசியாவின் வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து முக்கியப் பங்கு வகித்து வரும் நிலையில் ஆசியானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கலந்துகொண்ட சந்திப்பில் வியாழக்கிழமை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
ஆசியான் பங்கு வகிக்கும் அனைத்து முக்கியக் கருத்தரங்குகளிலும் இந்தியாவும் உறுப்பியம் பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
கிழக்காசிய உச்சநிலை மாநாடு, ஆசியான் வட்டாரக் கருத்தரங்கு, ‘ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் பிளஸ் சந்திப்பு’ போன்றவற்றை டாக்டர் விவியன் சுட்டினார்.
“தென்கிழக்காசிய வட்டாரத்தின் தொடர் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இந்தியா முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. தற்போது புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மை தொடரும் நிலையில் இந்தியாவின் பங்கு மேலும் முக்கியமானதாகிறது,” என்றார் அவர்.
ஆசியான்-இந்தியா உறவுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை தற்போது சிங்கப்பூர் ஏற்றுள்ளது.

