வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வியாழக்கிழமையன்று சீனப் பேராளர் வாங் யியைச் சந்தித்துப் பேசவிருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. இந்தோனீசியாவில் நடைபெறும் ஆசியான் கூட்டத்தின்போது இந்தச் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் மருத்துவக் காரணங்களால் ஆசியான் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாததால், திரு வாங் இந்தக் கூட்டத்தில் சீனாவைப் பிரதிநிதிக்கிறார்.
திரு பிளிங்கன் திரு சின்னையும் திரு வாங்கையும் ஜூன் மாதம் பெய்ஜிங்கில் சந்தித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு மேற்கொண்ட முதல் வருகையாக அது அமைந்தது. பொருளாதார ரீதியாக உலகின் இரு பெரும் வல்லரசுகளாகத் திகழும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சையில் நிலைத்தன்மை அடைய திரு பிளிங்கன் சீனாவுக்குச் சென்றிருந்தார்.
அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் இம்மாதத் துவக்கத்தில் சீனாவுக்கு வருகையளித்தார். பருவநிலைத் தூதரான ஜான் கெர்ரி அடுத்த வாரம் சீனாவுக்குச் செல்லவிருக்கிறார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை தலைவரான திரு வாங், வெளியுறவு அமைச்சர் திரு சின்னைவிட உயர்ப்பதவி வகிக்கிறார். வெளியுறவு அமைச்சரான திரு சின், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைக்கான தலைவராவார்.
இதற்கிடையே, சீனாவின் அமெரிக்கத் தூதர் ஆசியாவுக்கான உயர் அமெரிக்கத் தற்காப்பு அதிகாரியைப் புதன்கிழமை சந்தித்ததாக பெண்டகன் தெரிவித்தது. ராணுவப் பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா தயங்குவதாக அமெரிக்கா குறை கூறியதைத் தொடர்ந்து இருவரும் பெண்டகனில் சந்தித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீனத் தலைவர் சீ ஜின்பிங்கும் இவ்வாண்டு பிற்பகுதியில் சந்திப்பதற்கு வழிகோல இந்தச் சந்திப்புகளுடன் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் பதற்றநிலை இன்னும் நீடிக்கிறது.
திரு வாங்கை திரு பிளிங்கன் கடைசியாக பெய்ஜிங்கில் சந்தித்தபோது, இரு நாட்டுக்கும் இடையிலான பூசலுக்கு “சீனாவைப் பற்றி அமெரிக்கா கொண்டுள்ள தவறான கண்ணோட்டங்களும் தவறான சீனக் கொள்கைகளுமே” மூலக் காரணம் என்று திரு வாங் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, வர்த்தகம், பாதுகாப்பு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாட்டுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.

