சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் புதன்கிழமை ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடாவைச் சந்தித்தார்.
லித்துவேனியாவில் நடந்த நேட்டோ உச்ச மாநாட்டை ஒட்டி இருவரும் பேச்சு நடத்தினர்.
ஜப்பானில் செயல்பட்டு வந்த ஃபுக்குஷிமா என்ற அணுசக்தி ஆலை சுனாமி காரணமாக பாதிக்கப்பட்டது.
அந்த ஆலையில் பயன்படுத்தப்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட மில்லியன் டன்னுக்கும் அதிக தண்ணீரை விரைவில் கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டமிடுகிறது.
அந்தத் தண்ணீரில் இருந்து கதிரியக்கப் பொருள்கள் வடிகட்டப்பட்ட பிறகும் தண்ணீரில் கதிரியக்க அளவு பாதுகாப்புத் தர அளவைவிட அதிகமாக இருந்தால் தண்ணீரைத் திறந்துவிட வேண்டாம் என்று அந்தச் சந்திப்பின்போது ஜப்பானிய பிரதமரைத் தென்கொரிய அதிபர் கேட்டுக்கொண்டார்.
ஜப்பான் திறந்துவிடக்கூடிய தண்ணீர் கடலில் கலந்து தங்கள் நாடுவரை பரவி வந்துவிடக்கூடும் என்றும் அதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு கடைசியில் தங்கள் உடல் நலன் கெடும் என்றும் தென்கொரிய மக்கள் அச்சமடைகிறார்கள்.
வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை அண்மையில் பாய்ச்சியது.
அதை தென்கொரியா- ஜப்பான் தலைவர்கள் கண்டித்தனர். வடகொரியாவின் செயல் பதற்றத்தை அதிகப்படுத்துகிறது என்று அவர்கள் கூறினர்.