ஸ்காட்லாந்து: பிரிட்டனைத் தோற்றுவாயாகக் கொண்ட கோல்டன் ரிட்ரீவர்ஸ் இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் அந்த இன நாய் முதன் முதலாக தோன்றிய ஸ்காட்லாந்தின் ஐலேண்ட் வட்டாரத்தில் கூடி இருக்கிறார்கள்.
முதலாவது கோல்டன் ரிட்ரீவர்ஸ் நாய்க் குட்டிகள் 155 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் உள்ள கிளென் ஆஃப்ரிக் என்ற இடத்தில் இருந்த குய்சச்சன் ஹவுஸ் என்ற வீட்டில் பிறந்தன.
ஸ்காட்லாந்தின் மலைப் பிரதேசத்திற்குத் தோதான நாய் ஒன்றை விரும்பிய சர் டுட்லி மார்ஜோரிபேங்க்ஸ் என்ற பிரபு, அந்த நாய்க் குட்டிகளை வளர்த்து வந்தார். அவை பிறகு பிரிட்டன், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் முழுவதும் பரவிப் பெருகின.
அந்தச் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள், அவை முதன்முதலாக தோன்றிய இடத்தில் தங்கள் வளர்ப்புகளுடன் ஒன்றுகூடி மகிழ்ந்து வருகிறார்கள்.
உரை நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், திறன் விளக்கக் காட்சிகள், இரவுநேர ஊர்வலம் உள்ளிட்ட தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகளும் அந்தப் பகுதியில் இந்த வாரத்தில் நடந்து இருக்கின்றன.
ஒரே இடத்தில் அந்த வகை நாய்க் குட்டிகள் ஆக அதிக எண்ணிக்கையில் உலகத்திலேயே முதன்முதலாக அங்கு தான் கூடி இருக்கின்றன.
ஸ்காட்லாந்து கோல்டன் ரிட்ரீவர்ஸ் மனமகிழ் மன்றத்தின் செயலாளரான கரோல் ஹென்றி, கோல்டன் ரிட்ரீவர்ஸ் இனத்தைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த ஒன்றுகூடலின் நோக்கம் என்று தெரிவித்தார்.
கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, செகோஸ்லாவியா, இத்தாலி, குரோஷியா, எஸ்தோனியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கோல்டன் ரிட்ரீவர்ஸ் வளர்ப்புப் பிராணிகள் குய்சச்சன் பகுதியில் கூடி இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த இன நாய்க் குட்டிகள் பிறந்த வீடு பழுதாகி 1960களில் அழிந்துவிட்டது.

