வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ள ஹாலிவுட் நடிகர்கள்

1 mins read
e0f899b6-21e0-4fe0-9e24-9cb13e9b0a2e
‘ரைட்டர்ஸ் கில்ட் அஃப் அமெரிக்கா’ எனும் தொழிற்சங்கம் மேம்பட்ட சம்பளத்தையும் வேலை சூழலையும் கோரி, கடந்த மே மாதத்திலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்கா: திரைக்கதை எழுத்தாளர்கள் நடத்திவரும் திரைப்படத் துறையின் ஆகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சேர்ந்துகொள்ளப்போவதாக ஹாலிவுட் நடிகர்கள் அறிவித்துள்ளனர்.

‘ஸ்கிரீன் ஏக்டர்ஸ் கில்ட்’ (எஸ்ஏஜி) எனும் தொழிற்சங்கம், திரைப்படங்களை வெளியிடும் பெரிய நிறுவனங்கள் நியாயமான முறையில் லாபங்களைப் பிரித்து வழங்கவும் மேம்பட்ட வேலைச் சூழலை அமைத்துத் தருவதற்கும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

கிட்டத்தட்ட 160,000 கலைஞர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து பணிபுரிவதை நிறுத்திவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, அமெரிக்கத் திரைப்படத் தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலானவற்றின் செயல்பாடுகள் ஒரு முடிவுக்கு வரத் தொடங்கும்.

ஹாலிவுட் நடிகர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை காலை நெட்ஃபிலிக்ஸின் கலிஃபோர்னியா தலைமையகத்திற்கு வெளியே தொடங்குவார்கள். அதன் பிறகு அவர்கள் வார்னர் புரோஸ், டிஸ்னி போன்ற நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்வார்கள்.

நடிகர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவும், கணினியில் உருவாக்கப்பட்ட முகங்களும் குரல்களும் பயன்படுத்தப்படாது என்ற உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரி வருகிறது.

இதற்கிடையே, ‘ரைட்டர்ஸ் கில்ட் அஃப் அமெரிக்கா’ எனும் மற்றொரு தொழிற்சங்கம் மேம்பட்ட சம்பளத்தையும் வேலை சூழலையும் கோரி, கடந்த மே மாதத்திலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகிறது.

அந்தத் தொழிற்சங்கத்தில் 11,500 உறுப்பினர்கள் உள்ளனர்.

இரண்டு தொழிற்சங்கங்ளின் இரட்டிப்புப் போராட்டங்களும் 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காபோராட்டம்