சோல்: தென்கொரியாவில் கனமழை அதிகரித்திருப்பதால் அந்நாட்டு அரசாங்கம், அதிகாரிகள் அனைவரையும் உயர் விழிப்புநிலையைக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பெய்த கனமழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. 100க்கு மேற்பட்டோர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தலைநகர் சோலில் 4,000க்கு மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டது. நாடு முழுவதும் 135 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்துறை, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பூசான் நகரில் ஒருவரைக் காணவில்லை. தென் ஜியோலா வட்டாரத்தில் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.
உயிர்ச் சேதத்தைத் தடுப்பதற்கு முக்கிய முன்னுரிமை தரப்படுவதை உறுதிசெய்யுமாறு பிரதமர் ஹன் டக்-சூ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். உயர் விழிப்புநிலையைக் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
10,500க்கு மேற்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துச் சீரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுக்காவல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.