சோல்: மத்திய தென்கொரியாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய சுரங்கப்பாதையில் சிக்கி உயிரிழந்த ஒன்பது பேரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவில் பல நாள்களாக பெய்து வந்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடுதல் பணியைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சியோங்ஜு எனும் பகுதியில் உள்ள அந்தச் சுரங்கப்பாதையில் இருந்த பேருந்தில் அந்த ஒன்பது பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஒரு பேருந்து உட்பட 15 வாகனங்கள் அந்தச் சுரங்கப்பாதையில் மூழ்கியதாக தீயணைப்பு நிலையத் தலைவர் சியோ ஜியோங் இல் தெரிவித்தார்.
உள்ளூர் செய்தி நிறுவனமான எம்பிசியில் ஒளிபரப்பப்பட்ட சிசிடிவி காணொளியில், மழைவெள்ளத்தில் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் வேளையில் சேற்று நீர் சுரங்கப்பாதைக்குள் புகுவது தெரிந்தது.
உள்ளூர் நேரம் காலை 6 மணி நிலவரப்படி, 26 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் 10 பேரைக் காணவில்லை என்றும் உள்துறை, பாதுகாப்பு அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.
கனமழை காரணமாக நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டதை அடுத்து, 7,540 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சுரங்கப்பாதையில் எத்தனைப் பேரும் வாகனங்களும் நீருக்கு அடியில் சிக்கினர் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
தற்போது வெளிநாடு சென்றுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், அனைத்து வளங்களையும் திரட்டுமாறு பிரதமர் ஹான் டக் சூவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ள அபாயம் நிலவும்போது அந்தச் சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்வதை அரசாங்கம் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று இச்சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒருவர் கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

