600 ரிங்கிட் உதவித்தொகை: 210,000 பேர் பெறுவார்கள்

1 mins read
f73ab378-4543-41ac-af15-0578d5c140d3
மலேசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதால் சங்கடங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட் தொகையை ஒதுக்கி இருக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்து இருக்கிறார். படம்: பெர்னாமா - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து இருப்பதால் சங்கடங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட் தொகையை ஒதுக்கி இருக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்தத் திட்டத்தின்கீழ், 210,000க்கும் மேற்பட்ட வசதி குறைந்த மக்கள் திங்கட்கிழமை (ஜூலை 17) முதல் 600 ரிங்கிட் தொகை பெறுவார்கள்.

அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்று நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

சாரா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் அந்த உதவித் திட்டம் தீபகற்ப மலேசியாவில் இருப்போருக்கு ஜூலை 17 முதல் ஆதரவு அளிக்கும்.

சாபா, சரவாக், லாபுவான் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் 7 முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

உதவித்தொகையைப் பெறுவதற்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள https://bantuantunai.hasil.gov.my என்ற இணையத்தளத்தை நாடலாம்.

இந்த உதவித்திட்டத்தைப் பற்றி மேல்விவரம் தெரிந்துகொள்ள https://www.mykasih.com.my என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்