தோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு அந்நாட்டு மக்களின் ஆதரவு குறைந்து வருகிறது.
தேசிய அடையாள அட்டையில் ஏற்பட்ட பிரச்சினை, ஃபுக்குஷிமா அணு உலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேற்றம் போன்றவை கிஷிடாவின் ஆதரவு குறைய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
‘கியோட்ஓ நியூஸ்’ நடத்திய ஆய்வில் கிஷிடாவிற்கான ஆதரவு கிட்டத்தட்ட 6.5 விழுக்காட்டுப் புள்ளி குறைந்துள்ளது. அவருக்குத் தற்போது 34.4 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் இரு ஜப்பானிய நிறுவனங்களின் ஆய்வும் கிஷிடாவிற்கு ஆதரவு குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.
ஜப்பானில் தேசிய அடையாள அட்டையை பல சேவைகளுடன் இணைக்கும் முயற்சியை கிஷிடா மேற்கொண்டுள்ளார். ஆனால், அதற்கு மக்களிடையே ஆதரவு இல்லை எனக் கூறப்படுகிறது. தங்கள் தரவுகள் திருடப்படும் அபாயம் இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.