தென்கொரியா வெள்ளம்: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
7a4418b8-c1be-4db9-acab-7ce1f8a57584
மீட்புப் பணிகள் ஒழுங்காக நடத்தப்படவில்லை என்று தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் குறைகூறியுள்ளார். - படம்:இபிஏ

சோல்: தென்கொரியாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 39 பேர் மாண்டுவிட்டனர். சுரங்கப்பாதைக்குள் வெள்ளநீர் புகுந்ததை அடுத்து 12 பேர் உயிரிழந்தனர்.

இரவோடு இரவாக மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. சுரங்கப்பாதையில் 16 வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அவற்றில் ஒரு பேருந்தும் அடங்கும்.

மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மீட்புப் பணிகளில் நிகழ்ந்த குளறுபடியே காரணம் என்று அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டுப் பயணத்திலிருந்து அண்மையில் நாடு திரும்பிய அதிபர் யூன், இயற்கைப் பேரிடரைச் சமாளிக்கும் இலக்குடன் அனைத்து அமைப்புகள் அடங்கிய கூட்டம் ஒன்றை கூட்டினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இருப்பினும், வெள்ளம் ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டும் அந்தச் சுரங்கப்பாதையை அரசாங்கம் தற்காலிகமாக மூடவில்லை என்று அந்தச் சாலையை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் குறைகூறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமையிலிருந்து தென்கொரியாவின் மத்திய, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக உயிரிழப்புகளுடன், 34 பேர் காயமடைந்ததாகவும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்