தாய்லாந்தில் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சித் தலைவர் பிட்டா

பிரதமர் பதவி ஏற்பது குறித்த முடிவு ஒத்திவைப்பு

2 mins read
ae7955eb-4ac3-4575-9d2d-97e5d494cf67
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு செவ்வாயன்று பேட்டியளித்த மூவ் ஃபார்வர்ட் கட்சித் தலைவர் பிட்டா - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தில் மூவ் ஃபார்வர்ட் கட்சித் தலைவர் பிட்டா பிரதமர் பதவி ஏற்கத் தகுதியானவர்தானா என்ற முடிவை அது குறித்து நாடாளுமன்றம் விவாதித்த பின்னர் தான் எடுக்கப்போவதாக தாய்லாந்து நாடாளுமன்ற நாயகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய நாடாளுமன்ற நாயகர் வான் முகமது நூர் மாத்தா, அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்னரே இது குறித்த தமது இறுதி முடிவை தான் தெரிவிக்க முடியும் என்று தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற கொறடா, செனட் சபைத் தலைவர் ஆகியோரை சந்தித்த பின் திரு வான் முகமது மேற்கண்டவாறு கூறினார்.

தாய்லாந்து ராணுவமும் அந்நாட்டின் பழமைவாதக் கட்சிகளும் நாடாளுமன்ற விதிமுறைகளை மேற்கோள் காட்டி திரு பிட்டாவின் பிரதமர் பதவி நியமனம் ஒருமுறை நிராகரிக்கப்பட்டபின் அவர் மீண்டும் பிரதமர் பதவிக்காக போட்டியிட முடியாது என கூறிவருகின்றன.

தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் பங்கேற்பர் என்றும் திரு வான் நூர் தெரிவித்தார்.

தாய்லாந்து செனட் சபையின் வாக்களிக்கும் அதிகாரத்தை ரத்து செய்யப் போராடும் திரு பிட்டா, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்குக் கிடைக்காமல் செனட் சபையின் அதிகாரத்தையும் தம்மால் குறைக்க முடியாத பட்சத்தில், தான் போட்டியிலிருந்து விலகப் போவதாகவும் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றம், பிட்டா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடுமா என்றும் முடிவு செய்யவுள்ளது.

இந்நிலையில், தாய்லாந்தின் பியூ தாய் கட்சி, திரு பிட்டா பிரதமர் பதவிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டால், அந்தப் பதவிக்கு தனது கட்சியைச் சேர்ந்த சிரேட்டா தவிசின் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பியூ தாய் கட்சியின் மற்றொரு பிரதமர் வேட்பாளரான திரு பெய்தோங்கான் ஷினவத்ர செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தாய்லாந்துப் பிரதமர் பதவி வாக்கெடுப்பில் வெற்றி பெற 375 வாக்குகள் பெற வேண்டும். இதில் சென்ற வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் திரு பிட்டாவுக்கு 324 வாக்குகளே கிடைத்தது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், ஜனநாயக ஆதரவாளரான திரு பிட்டா தமக்கிருக்கும் ஆதரவை அதிகரிக்கும் முயற்சியில் தாம் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அவர் 375 வாக்குகள் பெறும் சாத்தியம் இல்லை என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தாய்லாந்து நாட்டின் மன்னருக்கு எதிராகப் பேசுவோரை தண்டிக்கும் சட்டத்தை தான் மாற்றி அமைக்கப் போவதாக திரு பிட்டா கூறியுள்ளதே அவரை பிரதமர் பதவிக்கு பழமைவாதக் கட்சிகள் ஆதரிக்காததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்