புத்ராஜெயா: மலேசியாவில் திருமணமான மாதை வசியப்படுத்த ஆடவர்கள் முயன்றால் அது ஒரு குற்றம் என்று கூறும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் ஒரு பிரிவு, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அதை அகற்ற வேண்டும் என்றும் மலேசிய வழக்கறிஞர் ஒருவர் கூட்டரசு நீதிமன்றத்தில் வாதாடினார்.
மணமான மாது ஒருவரை வசியப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ள தொழிலதிபர் ஒருவரின் சார்பில் முன்னிலையான திருவாட்டி ஜெயரூபினி ஜெயராஜ் என்ற அந்த வழக்கறிஞர், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 498ஆவது பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கான மாதரின் உரிமையை மீறுவதாக இருக்கிறது என்று வாதாடியதாக பெர்னாமா தெரிவித்தது.
தங்கள் திருமணத்தில் தலையிடும் ஒருவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைகளைத் தொடங்கும் உரிமையை அந்தப் பிரிவு கணவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது என்று அந்த வழக்கறிஞர் மேலும் வாதாடினார்.
ஆகையால், அந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்கப்பட வேண்டும என்றும். அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அந்தப் பிரிவு திருமணமான மாதர்களைப் பாரபட்சமாக நடத்துகிறது. மனைவியரை அவர்களின் கணவர்களின் சொத்தாக அந்தப் பிரிவு கருதுகிறது.
ஆகையால், கணவன்மார்கள் தங்களுடைய மனைவிகளைக் கொடுமைப்படுத்துவதை அந்தப் பிரிவு எளிதாக்குகிறது என்றும் அந்தப் பெண் வழக்கறிஞர் வாதிட்டார்.
எந்தவொரு சட்டத்திலும் சமயம், இனம், மரபு, பிறந்த இடம், பாலினம் ஆகியவை தொடர்பில் குடிமக்களுக்கு எதிராக பாரபட்சம் கூடாது என்று கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 8(2) கூறுவதை அந்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
வழக்கறிஞர் திருவாட்டி ஜெயராஜும் வழக்கறிஞர்களான ஜே மூய் வெய் ஜியுன், பட்ரிசியா அப்துல் லத்திஃப் ஆகியோரும் தொழிலதிபர் ஒருவர் சார்பாக முன்னிலையாகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 498வது பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதா, இல்லையா என்பதன் தொடர்பில் அந்தத் தொழிலதிபர் கூட்டரசு நீதிமன்றத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

