சிட்னி: ஆஸ்திரேலிய நிறுவனமான ‘லெண்ட்லீஸ்’ ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் கிட்டத்தட்ட 740 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இது அந்நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 விழுக்காடாகும். இந்தத் தகவல்கள் அந்நிறுவனத்தின் குறிப்பறிக்கையில் இருந்ததாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஆட்குறைப்பு பெரும்பாலும் அந்நிறுவனத்தின் அனைத்துலகக் கிளைகளில் இடம்பெறும் என அந்தக் குறிப்பாணையில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
இந்தத் தகவல்களை அந்நிறுவனத்தின் பேச்சாளர் மின்னஞ்சலில் உறுதிப்படுத்தினார். மேலும் அவர், இது அந்நிறுவனத்தின் ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதி எனக் கூறினார்.
அந்நிறுவனத்தின் இணையத்தளத் தகவலின்படி, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா போன்றவற்றில் இயங்கும் அதன் கிளைகளில் கிட்டத்தட்ட 7,800 பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.